பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

திருக்குறள்

தமிழ் மரபுரை


குற்றமாம். இவ் விரு திறத்தையும் ஒரே யிடத்திற் கூறுவதே தக்கதாகலின், இரண்டையுங் கூறுதற்கேற்ற துறவறவியலிற் கூறினார். ஆயினும், களவு செய்யாமை ஈரறத்திற்கும் பொதுவாம்.

களவு செய்தலும் கூடாவொழுக்கத்தைச் சேர்ந்ததினாலும், காமம் பற்றிய கூடாவொழுக்கமும் களவாய் நிகழ்தலானும், இவ்வகை யொற்றுமை பற்றி உயர்திணைப் பொருள்பற்றிய களவை விலக்கும் கூடாவொழுக்கத்தின் பின் அஃறிணைப் பொருள்பற்றிய களவு விலக்கு வைக்கப்பட்டது.

கள் என்னும் முதனிலை முதற்காலத்திற் களவு செய்தலைக் குறித்ததே. கள்ளம், கள்ளத்தனம், கள்ளன், கள்வு, களவு என்னும் சொற்களை நோக்குக. பிற்காலத்திற் கள் என்னும் முதனிலை தன் பொருளை யிழந்தபின், தொழிற் பெயரொடு துணைவினை சேர்ந்த களவுசெய் என்னும் கூட்டுச்சொல் முதனிலை தோன்றிற்று. “கட்குவான் பரிக்கில் ஞேலுவான் பரிக்கேணம்" என்னும் மலையாளப் பழமொழியையும் நோக்குக.

281. எள்ளாமை வேண்டுவா னென்பா னெனைத்தொன்றுங்
கள்ளாமை காக்கதன் னெஞ்சு.

(இ-ரை.) எள்ளாமை வேண்டுவான் என்பான் - கள்வன் என்று பிறரால் இழித்தெண்ணப் படாமையை விரும்புகின்றவன் என்று சொல்லப்படுவான்; தன் நெஞ்சு எனைத்து ஒன்றும் கள்ளாமை காக்க - தன் மனம் எவ்வகைப் பொருளையும் மறைவிற் கவரக் கருதாவகை காத்துக் கொள்க.

அறிவு போன்ற கருத்துப்பொருளும் அடங்க 'எனைத்தொன்றும்' என்றார். நெஞ்சு கள்ளாமை காக்க என்றதனால், கள்ளுதல் இங்குக் கள்ளக் கருதுதல் என்பது பெறப்படும். 'என்பான்' என்னும் செய்வினை வடிவுச் சொல் செயப்பாட்டுவினைப் பொருள் கொண்டது.

282. உள்ளத்தா லுள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தாற் கள்வே மெனல்.

(இ-ரை.) உள்ளத்தால் உள்ளலும் தீதே - தீவினைகளைத் தம் நெஞ்சாற் கருதுதலும் துறவறத்தார்க்குக் குற்றமாம்; பிறன் பொருளைக் கள்ளத்தாற் கள்வேம் எனல் - ஆதலால், பிறன் பொருள் எதையேனும் அவனறியாமற் கவர்வேம் என்று கருதற்க.