பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

திருக்குறள்

தமிழ் மரபுரை



தம் சொந்தப் பொருளைத் தீதென்று விட்டுவிட்டுத் துறவு பூண்டோர், பின்பு மீண்டும் பொருளாசை கொண்டு பிறர் பொருளைக் கவரச் சமையம் பார்ப்பாராயின், நீங்கின நோயின் மறுதாக்கு முன்னினும் வலிதாயிருத்தல் போல அவராசையும் வலிதாயிருக்கு மாதலின்; அவர் கவரக் கருதும் பொருளுடையார்மீது அவர்க்கு அருளோ அன்போ பிறவாதென்பது கருத்து.

286. அளவின்க ணின்றொழுக லாற்றார் களவின்கட்
கன்றிய காத லவர்.

(இ-ரை.) களவின்கண் கன்றிய காதலவர் - களவின்கண் ஊன்றிய வேட்கை யுடையவர்; அளவின்கண் நின்று ஒழுகல் ஆற்றார் - தமக்குரிய ஒழுக்க வரம்பின்கண் நின்று ஒழுகமாட்டார்.

அளவைகளால் உயிர்க்கு வரும் இன்பதுன்பக் கூறுகளை ஆராய்ந்தறிதல் மெய்யுணர்தல் என்னும் அதிகாரத்திற்கே சிறப்பாக ஏற்குமாதலின், அறவூழ்கம் (தருமத்தியானம்) என்னும் ஆருகத மதக் கொள்கையைப் பரிமேலழகர் இங்குப் புகுத்துவது பொருந்தாது.

287. களவென்னுங் காரறி வாண்மை யளவென்னு
மாற்றல் புரிந்தார்க ணில்.

(இ-ரை.) களவு என்னும் கார் அறிவு ஆண்மை - களவாண்மை என்று சொல்லப்படும் இருண்ட அறிவுடைமை; அளவு என்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல் - எல்லாப் பொருள்களின் இயல்பையும் உள்ளவாறு அளந்தறியும் திறமையை விரும்பினவரிடத்து இல்லை.

இருள் என்பது அகவிருளாகிய மயக்கம், புறவிருளின் கருமை இனம் பற்றி அகவிருட்கும் ஏற்றப்பட்டது. களவையுந் திறம்படச் செய்வதற்கு அறிவு வேண்டியிருப்பதால், அத் தீய அறிவு காரறி வெனப்பட்டது. 'என்னும்' என்பது ஈரிடத்தும் 'ஆகிய' என்னும் பொருளது. ஒளியுடன் இருள் பொருந்தாததுபோலத் துறவறத்திற்குரிய தூய அறிவொடு தீய அறிவு பொருந்தாது என்பது கருத்து.

288. அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்
களவறிந்தார் நெஞ்சிற் கரவு.

(இ-ரை.) அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம்போல - பொருள்களின் இயல்பை உள்ளவாறறிந்தவரின் உள்ளத்தில் அறம் நிலைத்து நிற்றல்போல;