பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - துறவறவியல் - வாய்மை

183



இத்தகைய தீங்கற்ற பொய்யுரைகளால், ஒருவர்க்குப் பெருஞ்செல்வங் கிட்டுவித்தலும் ஒருவரைச் சாவினின்று தப்புவித்தலும் கூடும்.

நன்மை பயக்கும் பொய்யுரையும் வாய்மையின்பாற் படுமெனவே. தீமை பயக்கும் மெய்யுரையும் பொய்ம்மையின்பாற் படும் என்பதாம். ஆகவே, ஓர் உரையின் மெய்ம்மையும் பொய்ம்மையும் அதன் விளைவும் பற்றியல்லது நிகழ்ச்சிமட்டும்பற்றித் துணியப்படுவ தன்றென்பது கருத்தாம்.

293. தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்.

(இ-ரை.) தன் நெஞ்சு அறிவது பொய்யற்க - ஒருவன் தன் நெஞ்சு அறிந்ததொன்றைப் பிறர் அறியவில்லை யென்று கருதிப் பொய் சொல்லா தொழிக; பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச் சுடும் - பொய் சொன்னா னாயின், அதனை யறிந்த தன் நெஞ்சே தான் செய்த தீவினைக்குச் சான்றாக நின்று தன்னைக் குற்றஞ் சாட்டித் துன்புறுத்தும்.

"நெஞ்சை யொளித்தொரு வஞ்சக மில்லை" (கொன்றை, 54) முக்கரண வினைக ளெல்லாவற்றையும் நெஞ்சு அறிவதனாலேயே அதற்கு மனச்சான்று என்று பெயர். மனச்சான்று உடனிருந்துரைக்கவும் அதை மறுத்துப் பொய் சொல்வது கொடிய தென்பதை யுணர்த்தவே, "நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டா" என்றார் உலகநாதர். 'சுடும்' என்றதினால், மனச்சான்று குத்தியுணர்த்தி மனநோயை யுண்டுபண்ணுவது மட்டுமன்றி, தெய்வச் சான்றாக நின்று வெளிப்படுத்தி அரசன் தண்டனையையும் அடைவிக்கும் என்பது பெறப்படும்.

294. உள்ளத்தாற் பொய்யா தொழுகி னுலகத்தார்
ருள்ளத்து ளெல்லா முளன்.

(இ-ரை.) உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் - ஒருவன் நெஞ்சாரப் பொய் சொல்லாது ஒழுகுவானாயின்; உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் அவன் உயர்ந்தோ ருள்ளத்திலெல்லாம் உளனாவன்.

உயர்ந்தோர் உள்ளத்தில் உளனாதலாவது அவரால் மதிக்கப்படுதலும் என்றும் நினைக்கப்படுதலுமாம். 'உள்ளத்தால்' என்பது வேற்றுமை மயக்கம்.