பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

திருக்குறள்

தமிழ் மரபுரை



295. மனத்தொடு வாய்மை மொழியிற் றவத்தொடு
தானஞ்செய் வாரின் றலை.

(இ-ரை.) மனத்தொடு வாய்மை மொழியின் - ஒருவன் தன் உள்ளத்தொடு பொருந்த உண்மையைச் சொல்வானாயின்; தவத்தொடு தானம் செய்வாரின் தலை - அவன் தவமுந் தானமும் செய்தவரினுஞ் சிறந்தவனாவன்.

தவத்தொடு தானஞ் செய்வதினும் உளத்தொடு பொருந்த உண்மை சொல்வது அரிதாதலால், 'தவத்தொடு தானஞ் செய்வாரின் றலை' என்றார்.

296. பொய்யாமை யன்ன புகழில்லை யெய்யாமை
யெல்லா வறமுந் தரும்.

(இ-ரை.) பொய்யாமை அன்ன புகழ் இல்லை - இம்மையில் ஒருவனுக்குப் பொய் சொல்லாமை போன்ற புகழ்க் கரணகம் (காரணம்) வேறில்லை; எய்யாமை எல்லா அறமும் தரும் - உடம்பு வருந்தி எதுவுஞ் செய்யாமலே அது அவனுக்கு மறுமைக்கு வேண்டிய எல்லா அறங்களையுந் தரும்.

இல்லறத்திற் பொருளீட்டுதற்கும் துறவறத்தில் தவஞ் செய்தற்கும் உடம்பை வருத்தும் முயற்சி இன்றியமையாததாகும். அம் முயற்சி யின்றியே அவ் விருவினைப் பயனையுந் தருதலால், 'எய்யாமை யெல்லா வறமுந் தரும்' என்றார். 'புகழ்' ஆகுபெயர். எய்த்தல் உடம்பு வருந்தி யிளைத்தல்.

297. பொய்யாமை பொய்யாமை யாற்றி னறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.

(இ-ரை.) பொய்யாமை பொய்யாமை ஆற்றின் - ஒருவன் வாய்மை யறத்தைத் தொடர்ந்து செய்ய வல்லவனாயின்; பிற அறம் செய்யாமை செய்யாமை நன்று - அவன் பிற அறங்களைச் செய்யாதிருத்தலே நன்றாம்.

அடுக்குத்தொடர் இரண்டனுள் முன்னது தொடர்ச்சிபற்றியது; பின்னது தேற்றம்பற்றியது. வாய்மை யொன்றே எல்லா வறங்களின் பயனையுந் தருவதாலும், எல்லா வறங்களையும் ஒருவன் மேற்கொள்ளுதல் அரிதாத லாலும், பல வறங்களை ஒருங்கே மேற்கொள்ளின் அவற்றுட் சில தவறுவதால், ஏனையவற்றின் பயனையும் ஏனையறங்களின் பயனையும் பெறுவதே சிறந்ததாகும் என்பதை யுணர்த்த 'அறம்பிற செய்யாமை நன்று' என்றார்.