பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - துறவறவியல் - வெகுளாமை

189



உடல் தொடர்பு கொண்டாரொடு உளத்தொடர்பு கொண்டாரையும் வருத்தும் என்பதாம். புணையையும் என்னும் எச்சவும்மை தொக்கது. வெகுளி என்னுஞ் சொல்லின் வேர்ப்பொருளே எரிவது என்பதாம். வேகு-வெகுள்-வெகுளி.

307. சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

(இ-ரை.) சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு - சினத்தைத் தன் ஆற்றலுணர்த்தும் சிறந்த பண்பென்று பொருட்படுத்தி அதைக் கொண்டவன் கெடுதல்: நிலத்து அறைந்தான் கை பிழையாத அற்று - நிலத்தின்கண் அறைந்தவன் கை தப்பாது நோவுறுதல் போன்றதாம்.

இங்குப் பொருள் என்றதைப் "பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்" (761) என்பதிற்போலக் கொள்க.

308. இணரெரி தோய்வன்ன வின்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.

(இ-ரை.) இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும் - கொத்தான நாவுகளுள்ள பெருந்தீ வந்து சுட்டாற் போன்ற தீங்குகளை ஒருவன் தொடர்ந்து செய்தானாயினும்; வெகுளாமை புணரின் நன்று - அவனைச் சினவாமை கூடுமாயின் நன்றாம்.

தீமையின் மிகுதிதோன்ற 'இணரெரி' என்றும், தீவினைப் பன்மை தோன்ற 'இன்னா' என்றும், முற்றத்துறந்தவரும் பொறுத்தலருமை தோன்றப் 'புணரின்' என்றுங் கூறினார். சினத்தீ, கனல்தீயினுங் கொடியது என்பது கருத்து.

309. உள்ளிய தெல்லா முடனெய்து முள்ளத்தா
லுள்ளான் வெகுளி யெனின்.

(இ-ரை.) உள்ளத்தால் வெகுளி உள்ளான் எனின் - தவஞ் செய்வான் தன் மனத்தாற் சினத்தை ஒருபோதுஞ் கருதானெனின்; உள்ளியது எல்லாம் உடன் எய்தும் - அவன் பெறக்கருதிய பேற்றையெல்லாம் ஒருங்கே பெறுவான்.

உள்ளத்தால்' என்னும் மிகைச்சொல் அருள்பயின்ற வுள்ளம் என்பதை யுணர்த்தும். இம்மை மறுமை வீடென்னும் மூன்றும் அடங்க 'உள்ளிய தெல்லாம்' என்றார். சினம் கருத்து வடிவில் இல்லையெனின், சொற் செயல் வடிவிலும் இராதென்பது கருத்து.