பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

திருக்குறள்

தமிழ் மரபுரை



310. இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத்

துறந்தார் துறந்தார் துணை.

(இ-ரை.) இறந்தார் இறந்தார் அனையர் - சினத்தின்கண் அளவுகடந் தவர் உயிரோடிருப்பினும் செத்தவரை யொப்பர்: சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை - சினத்தை முற்றும் விட்டவர் இருவகைப் பற்றையும் முற்றத் துறந்தா ரளவினராவர்.

‘சினத்தை... துணை' என்பதற்கு, "சினத்தைத் துறந்தார் சாதற் றன்மை யராயினும் அதனை யொழிந்தா ரளவினர்... சினத்தை விட்டார்க்குச் சாக்கா டெய்துதற்குரிய யாக்கை நின்றதாயினும், ஞானத்தான் வீடு பெறுதல் ஒரு தலையாகலின் அவரை வீடு பெற்றாரோ டொப்ப ரென்றுங் கூறினார்" என்று பரிமேலழகர் உரைத்திருப்பது உயர்வாய்த் தோன்றினும் சற்று வலிந்து பொருள் கொண்டதாகும். 'சினத்தை' என்பது முன்னும் பின்னும் இசையும் தாப்பிசைப் பொருள்கோளும் இடைநிலை விளக்கணியுமாகும்.

அதி. 32-இன்னாசெய்யாமை

அதாவது, பகைபற்றியாவது ஒரு பயனோக்கியாவது விளையாட் டாகவாவது கவனமின்மையாலாவது ஓருயிர்க்கும் ஒரு தீங்கும் செய்யாமை. சினமில்லாத போதும் இன்னாசெய்தல் நிகழுமாயினும், பகைபற்றி நிகழ்வதே பெரும்பான்மை யாதலாலும், பகை வெகுளியின் நீட்சியாதலாலும், அதை விலக்குதற்கு இது வெகுளாமையின் பின் வைக்கப்பட்டது.

இன்னுதல் இனித்தல் அல்லது இன்பமாதல். இன் - இன்பு - இன்பம். இன்-இனி, `இன்னா' இனிய என்பதன் எதிர்மறையான பலவின்பால் வினையாலணையும் பெயர்.

311.சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா

செய்யாமை மாசற்றார் கோள்.

(இ-ரை.) சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் சிறப்பைத் தரும் பெருஞ் செல்வம் பிறரை வருத்திப் பெறக் கூடுமாயினும்; பிறர்க்கு இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள் - அதைப் பெறுதற்குப் பிறர்க்குத் தீங்கு செய்யாமை குற்றமற்ற பெரியோர் கொள்கையாம்.

இதனாற் பெரும்பய னோக்கியும் இன்னா செய்தல் விலக்கப்பட்டது.