பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

திருக்குறள்

தமிழ் மரபுரை


அறிவினான் ஆகுவது உண்டோ - உயிர்களின் இயல்பைப்பற்றி அறிந்த அறிவினால் ஏதேனும் ஒரு பயனுண்டோ? இல்லை யென்றவாறு.

உயிர்களைப்பற்றி அறிந்த அறிவாவது; உயிர்கள் எழுவகைப்பட்டன. என்பதும், அவை தொடக்கமிலியாகத் தத்தம் நல்வினை தீவினைக் கேற்ப நால்வகுப்பிற் பிறந்திறந்து துன்புற்று வருகின்றன என்பதும், அப் பிறவித் துன்பத்திற்கு இயல்பாக எல்லையில்லை யென்பதும், அத் துன்பத்தினின்று விடுதலை பெறும் வழி இறைவன் திருவருளைத் துணைக்கொண்டு இரு வகை யறங்களுள் ஒன்றைத் தூய்மையாகக் கடைப்பிடித்தலே என்பதுமாம்.

இனி, பிறவுயிர்க்குத் துன்பம் வராமற் காத்தலாவது, அஃறிணையில் இயங்குதிணையைச் சேர்ந்த நீர்வாழி, ஊரி, பறவை என்னும் மூவகை யுயிர் களுள், கூர்ந்து நோக்கினாலொழியக் கண்ணிற்குப் புலனாகாத நுண்ணுயிரிகளு மிருப்பதால் நடத்தல், நிற்றல், இருத்தல், கிடத்தல் முதலிய நிலைகளிலும், உண்டல் பருகல் முதலிய வினைகளிலும், கருவிகள் கொண்டு செய்யும் பல்வேறு தொழில்களிலும் அந் நுண்ணுயிரிகட்குச் சேதம் நேராவாறு கவனித்து ஒழுகுதலாம். இதனாற் கவனமின்மையால் நேரும் இன்னாச் செயல் விலக்கப்பட்டது.

பருவுடம்புள்ள பிறவுயிரிகள் தம்மைத் தாமே காத்துக்கொள்ளு மென்பதும், நுண்ணுயிரிகள் போல் எளிதாய்ச் சேதத்திற் குள்ளாகா என்பதும் கருத்தாம்.

316. இன்னா வெனத்தா னுணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கட் செயல்.

(இ-ரை.) இன்னா எனத் தான் உணர்ந்தவை - இவை மக்கட்குத் தீங்கு விளைப்பன என நால்வகை அளவைகளாலும் தான் அளந்து அறிந்தவற்றை; பிறன்கண் செயல் துன்னாமை வேண்டும் - பிறனிடத்துச் செய்தலைப் பொருந்தாமை துறந்தவனுக்கு வேண்டும்.

பட்டறிவாலும் உணர்ச்சியாலும் உண்மையென் றறிந்தவற்றை 'உணர்ந்தவை' என்றார்.

317. எனைத்தானு மெஞ்ஞான்றும் யார்க்கு மனத்தானா மாணாசெய் யாமை தலை.