பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - துறவறவியல் - கொல்லாமை

197



கொல்லாமை சூழும் நெறி - அது எவ்வுயிரையும் கொல்லாமையைக் கருதும் நெறியாகும்.

'யாதொன்றும்' என்றது துறந்தாரை நோக்கி ஓரறி வுயிரையும் உட்படுத்தற்கு.

325. நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக் கொல்லாமை சூழ்வான் றலை.

(இ-ரை.) நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் - பிறவி நிலைமைக்கு அஞ்சி அதனின்று விடுதலை பெறும்பொருட்டு உலகப்பற்றைத் துறந்த வருளெல்லாம்; கொலை அஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை - கொலை வினைக் கஞ்சிக் கொல்லாவறத்தைக் கடைப்பிடிப்பவன் தலையாவான்.

பிறவி நிலைமையாவது, எல்லா வுயிர்களும் இருதிணைப் பிறப்பிலும் எல்லையில்லாது பிறந்திறந்து, பிறப்புப் பிணி மூப்புச் சாக்காட்டொடு வறுமையும் பசியும் பகையும் உடல் வருத்தமுங் கொண்டு வருந்துதல்.

326. கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாண்மேற் செல்லா துயிருண்ணுங் கூற்று.

(இ-ரை.) கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல் கொல்லாமையைக் கடைப்பிடித்து ஒழுகுபவனின் வாழ்நாள்மேல்; உயிர் உண்ணும் கூற்றுச் செல்லாது - உயிரைக் கவரும் கூற்றுவன் செல்லமாட்டான்.

"இழைத்தநா ளெல்லை யிகவா பிழைத்தொரீஇக் கூற்றங் குதித்துய்ந்தா ரீங்கில்லை"(நாலடி. 6)

என்பதே உண்மையாதலால், உயிருண்ணுங் கூற்று வாழ்நாள்மேற் செல்லா தென்பது வாழ்நாள் நீடிக்கும் என்பதைக் குறிக்குமேயன்றி வேறன்று. வாழ் நாள் நீடிப்பதற்குக் கரணியம் (காரணம்) மரக்கறியுணவும் மனவமைதியும் மக்கள் நல்லெண்ணமும் இருக்கை வளிநிலைப் பயிற்சியும் அறவினைப் பயனும் இறைவன் திருவருளுமாம். வாழ்நாள் நீடிப்பதனால் துறவறத்திற் குரிய மெய்ப்பொரு ளாராய்ச்சியும் ஓகப்பயிற்சியும் முதிர்ச்சி பெறும்.

"உடம்பா ரழியின் உயிரா ரழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்