பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

திருக்குறள்

தமிழ் மரபுரை



உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே”(திருமந்.724)

என்று திருமூலர் கூறியதுங் காண்க. இனி,


"நெடுநா ளிருந்தபேரும்
நிலையாக வேயினுங் காயகற் பந்தேடி
நெஞ்சுபுண்ணாவர்"

என்று தாயுமானவர் கூறுதலால், காயகற்பத்தினால் வாழ்நாள் நீடித்தலுமாம்.

327. தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி தின்னுயிர் நீக்கும் வினை.

(இ-ரை.) தன் உயிர் நீப்பினும் - ஓர் உயிரியைக் கொல்லாதவழித் தன்னுயிர் தன்னுடம்பினின்று நீங்கிவிடு மாயினும்; தான் பிறிது இன்னுயிர் நீக்கும் வினை செய்யற்க - தான் பிறிதோர் உயிரியின் இனிய வுயிரை அதன் உடம்பினின்று நீக்கும் செயலைச் செய்யற்க.

தன்னுயிரைக் காத்தற்குப் பிறிதோ ருயிரியைக் கொல்லும் நிலைமை மூன்றாம். அவை, தன்னைக் கொல்ல வந்த வுயிரியைக் கொல்லுதல், தன் நோய்க்கு மருந்தாக ஓர் உயிரியைக் கொன்று தின்னுதல், தன்னைக் கொன்று விடுமென்று நம்பி அதைத் தடுத்தற்பொருட்டு ஒரு பேய்த் தெய்வத்திற்குக் காவு கொடுத்தல் என்பன. இம் முந்நிலைமையிலும் கொல்லா திருக்க என்றார் திருவள்ளுவர். கொலை செய்தவழியும் உயிர் உலகத்தில் நிலையாதாகலானும், கொலையாற் கரிசும் கொல்லாமையால் அறமும் வளர்தலானும், கொல்வதினுங் கொலையுண்ணுதலே சிறந்ததென்பது கருத்து, 'பிறிதின்னுயிர்' என்றது இருதிணைக்கும் பொதுவாம்.

328. நன்றாகு மாக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக் கொன்றாகு மாக்கங் கடை.

-(இ-ரை.) நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் - தேவரை நோக்கிச் செய்யும் வேள்வியிற் கொன்றால் இன்பமாகுஞ் செல்வம் பெரிதாமென்று ஆரியர் கூறினும்; சான்றோர்க்குக் கொன்று ஆகும் ஆக்கம் கடை - தமிழ்ச் சான்றோர்க்குக் கொல்வதினால் வரும் செல்வம் மிக இழிவானதாம்.

'எனினும்' என்னுஞ் சொல்லை "நல்லா றெனினுஞ் கொளல்தீது' (குறள். 222) என்பதிற்போற் கொள்க. நன்றாகும் ஆக்கமாவது விண்ணுல