பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - துறவறவியல் - நிலையாமை

203




335. நாச்செற்று விக்குண்மேல் வாராமுன் நல்வினை

மேற்சென்று செய்யப் படும்.

(இ-ரை.) நாச் செற்று விக்குள் மேல் வாராமுன் - பேசமுடியாவாறு நாவையடக்கி விக்கல் எழுவதற்கு முன்: நல்வினை மேற்சென்று செய்யப்படும் - இல்லறத்தாரால் விண்ணிற்கும் துறவறத்தாரால் வீட்டிற்கும் ஏற்ற அறவினைகள் விரைந்து செய்யப்படல் வேண்டும்.

நாச்சென்று விக்குள்மேல் வருதல் உயிர்போதற் கடையாளமாம். அன்று செய்தலேயன்றிச் சொல்லுதலும் கூடாமையின் 'வாராமுன்' என்றும், "ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு" ஆதலால் 'மேற்சென்று' என்றுங் கூறினார். நிலையாமை நோக்கி நல்வினை விரைந்து செய்யத் தூண்டியவாறு.

336. நெருந லுளனொருவ னின்றில்லை யென்னும்

பெருமை யுடைத்திவ் வுலகு.

(இ-ரை.) ஒருவன் நெருநல் உளன் இன்று இல்லை - ஒருவன் நேற்றிருந்தான். இன்றில்லை; என்னும் பெருமை உடைத்து இவ் வுலகு - என்று சொல்லும் பெருமையை உடையது இவ் வுலகம்!

உண்மை உடம்போ டிருத்தலையும் இன்மை இறத்தலையுங் குறிக்கும். இரட்டுறலால் உண்மை பிறத்தலையுங் குறிக்குமேனும், குழவிப் பருவத் திறப்பு மிகச் சிறுபான்மையாதலானும், குழவியை அஃறிணைச் சொல்லாலன்றி 'ஒருவன்' என்று உயர்திணைச் சொல்லாற் குறிப்பது மரபன்மையாலும்,

"வீற்றிருந் தாளன்னை வீதி தனிலிருந்தாள்
நேற்றிருந்தா ளின்றுவெந்து நீறானாள்"

என்று பட்டினத்தடிகள் பாடியது போல். "நேற்றிருந்தான், இன்றில்லை" என்று இளைஞரையும் முதியோரையும்பற்றிக் கூறுவதே வழக்கமாதலாலும், அவ் வுரை சிறப்புள்ளதன்றாம். 'ஒருவன்' என்னும் ஆண்பால் தலைமைபற்றிப் பெண்பால் ஒன்றன்பாலையுந் தழுவும். 'பெருமை' என்றது எதிர் பொருளணி (Irony) யாதலால், 'நிலையாமை மிகுதி' என்று கொள்ளத் தேவையில்லை.

337. ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப

கோடியு மல்ல பல.