பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

திருக்குறள்

தமிழ் மரபுரை



(இ-ரை.) ஒருபொழுதும் வாழ்வது அறியார் - ஒரு நொடிப்பொழு தேனும் தம் உடம்போடு கூடியிருத்தலை உறுதியாக அறியவியலாத மாந்தர்; கோடியும் அல்ல பல கருதுப - கோடிமட்டுமன்று. அதற்கு மேலும் பல எண்ணங் கொள்வர்.

'பொழுதும்' இழிவுசிறப்பும்மை. இறைவனருள் பெற்ற ஒரோவொரு வரன்றி ஏனையோர் தம் வாழ்நா ளெல்லையை அறியமாட்டாமையின், 'ஒருபொழுதும் வாழ்வ தறியார்' என்றார். கருதுங் கோடியின் மிக்க பலஎண்ணங்களாவன: தாம் பல்வேறு வகையிற் செல்வம் ஈட்டுவதும், அச்செல்வத்தைக் கொண்டு வளமனைகள் கட்டுவதும், அவற்றின் அமைப்பு வடிவுகளை எண்ணி வகுப்பதும், நன்செய் புன்செய்கள் வாங்குவதும், அவை வாங்கவேண்டிய இடங்களையும் அவற்றில் விளைவிக்கும் பயிர்களையும் அவற்றிற்கு அமர்த்த வேண்டிய வினையாள்களையும்பற்றித் தீர்மானிப்பதும், மேன்மேலும் தம் வருவாயைப் பெருக்கும் வழிகளை வகுப்பதும், ஐம்புல இன்பங்களையும் நுகர்வதும், அறத்திற்கும் புகழுக்கும் செய்ய வேண்டியவற்றைக் கருதுவதும், மெய்காவற்கும் குற்றேவற்கும் மல்லரையும் மழவரையும் அமர்த்துவதும், விரையூர்திகளில் ஊர்வதும், பல்வேறு நாடுகளையும் நகரங்களையுஞ் சென்று காண்பதும், தம் மக்களை உயர்நிலைக் கல்வி கற்கவைப்பதும், அவரை உயர்ந்த பதவிகளில் அமர்த்துவதும், அவருக்குச் சிறந்த குடும்பத்துப் பெண்களை மணஞ்செய்துவைப்பதும். தம் பேரப்பிள்ளைகளைக் கண்டு களிப்பதும், அவருக்குச் செய்ய வேண்டியவற்றைச் செய்வதும். பிறவுமாம். இதனாலேயே.

"உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடிநினைந் தெண்ணுவன"

என்றார் ஒளவையார்.

338. குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
யுடம்பொ டுயிரிடை நட்பு.

(இ-ரை.) உடம்பொடு உயிரிடை நட்பு - உடம்போடு உயிருக்குள்ள உறவு; குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்த அற்றே - முன் தனியாது உடனிருந்த முட்டைக்கூடு பின்பு பிரிந்து தனித்துக் கிடக்க. அதனுள் ளிருந்த பறவைக் குஞ்சு (வெளிவந்து இறக்கை முளைத்த பின்) பறந்து போன தன்மைத்தே.