பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - துறவறவியல் - துறவு

211


புறப்பொருளையும் நிலையான வுடைமையாகக் கருதுவதால், அதுவும் மயக்கத்தின் பாற்பட்டதே. 'வானோர்க்கும்' என்னும் சிறப்பும்மை தொக்கது. வீட்டுலகத்தின் உயர்ச்சிபற்றியே அதை 'வரன் என்னும் வைப்பு' என்றார் முன்னும் (24).

347. பற்றி விடாஅ விடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.

(இ-ரை.) பற்றினைப் பற்றி விடாதவர்க்கு - இருவகைப் பற்றையும் இறுகப்பற்றி விடாதவரை; இடும்பைகள் பற்றிவிடா - பிறவித் துன்பங்களும் இறுகப் பற்றி விடுவதில்லை.

'விடாஅ' ஈரிடத்தும் இசைநிறை யளபெடை. 'விடாஅ தவர்க்கு' வேற்றுமை மயக்கம். பற்று விடாதார்க்கு வீடில்லை யென்பதாம்.

348. தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.

(இ-ரை.) தீரத் துறந்தார் தலைப்பட்டார் - முற்றத் துறந்தவர் வீட்டையடைந்து உயர்ந்தார்; மற்றையவர் மயங்கி வலைப்பட்டார் - அங்ஙனந் துறவாதவர் மயங்கிப் பிறவிவலைக்குள் அகப்பட்டார்.

மயங்குதல் நிலையாதவற்றை நிலைத்தனவாகக் கருதுதலும், ஏதேனு மொரு பொருளின்கண் சிறிதேனும் பற்றுவைத்தலும். 'மற்றையவர்' முற்றத் துறவாதாரும் சற்றுந் துறவாதாரும். தலைப்படுதல் அடைதல் அல்லது உயர்தல்.

349. பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கு மற்று
நிலையாமை காணப் படும்.

(இ-ரை.) பற்று அற்ற கண்ணே பிறப்பு அறுக்கும் - ஒருவனுக்கு இருவகைப் பற்றும் நீங்கியபொழுதே அப் பற்று நீக்கம் அவன் பிறப்பை ஒழிக்கும்: மற்று நிலையாமை காணப்படும் - அவை நீங்காத பொழுது அவற்றால் மாறிமாறிப் பிறந்திறந்து வருகின்ற நிலையாமையே காணப்படும்.

கரணகம் (காரணம்) நீங்கின் கருமகமும் (காரியமும்) நீங்குமாதலால் 'பற்றற்ற கண்ணே' என்றார். மற்று - மற்றப்படி.