பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

திருக்குறள்

தமிழ் மரபுரை



357. ஓர்த்துள்ள முள்ள துணரி னொருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

(இ-ரை.) உள்ளம் ஒருதலையா ஓர்த்து உள்ளது உணரின் - மெய்யோதியர்பாற் கேட்ட செவியறிவுறுத்தப் பொருளை ஓர் ஓகியின் உள்ளம் உத்தியானும் அளவைகளானும் தெளியவாராய்ந்து உண்மைப் பொருளையுணருமாயின்; பேர்த்துப் பிறப்பு உள்ள வேண்டா - அவனுக்கு மீண்டும் பிறப்புள்ளதாக நினைக்க வேண்டுவதில்லை. ஓதியர் = ஞானியர் (வ.). ஓகி = யோகி (வ.).

அளவைகள் முன்னரே 242ஆம் குறளுரையிற் கூறப்பட்டன. இங்குத்தெளிவு கூறப்பட்டது.

358. பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு.

(இ-ரை.) பிறப்பு என்னும் பேதைமை நீங்க - பிறப்பிற்கு முதற்கரணகமாகிய அறியாமை கெட; சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு வீட்டிற்கு வினைமுதற் கரணகம் (நிமித்த காரணம்) ஆகிய செவ்விய பொருளை அறிவதே ஓகியர்க்கு அறிவாவது.

'பிறப்பென்னும் பேதைமை' என்றும், 'சிறப்பென்னுஞ் செம்பொருள்' என்றும் கருமகத்தைக் கரணகமாகச் சார்த்திக் கூறினார். எல்லா இன்பங்களுள்ளுஞ் சிறந்ததாகையால் வீடு 'சிறப்பு' எனப்பட்டது. எத்துணைப்பாகுபாடுமின்றி ஒன்றாய், முதலும் முடிவுமின்றி நித்தமாய், பிறிதொன் றோடும் உண்மையிற் கலவாது தூய்மையாய், ஒருவகையிலும் ஒப்பற்ற தனி நிலையாய் எல்லாப் பொருளையும் பற்றி நின்றும் அவற்றால் தாக்குண்ணாததாய், எத்துணைக் காலமாகியுந் திரியாததாய், என்றும் ஒரு தன்மையதாக நிற்றல்பற்றிப் பரம்பொருளைச் செம்பொருள்' என்றார். 756ஆம் குறளில் 'மெய்ப்பொருள்' என்றும், அடுத்த குறளில் 'உள்ளது' என்றும் கூறியதும் இதுபற்றியே. அப்பொருளைக் காண்கையாவது, ஆதன் தன் அறியாமை நீங்கி அதை இடைவிடாது எண்ணித் தன் உள்ளத்தால் அதனொடு இரண்டறத்கலத்தல். காண்கை யென்றது அகக்கண்ணாற் காண்டல். உயிர் உடம்பினின்று நீங்கும்போது அதன் எண்ணம் எதைப்பற்றியதோ அதுவாய் அது தோன்றுமென்பது சமயநூற் றுணிபாகலின், வீடு பெறுவார்க்கு அக்காலத்துப்-