பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - துறவறவியல் - அவாவறுத்தல்

221


நீங்கும்வரை என்றும் விழிப்பாயிருத்தற் பொருட்டு, எல்லா ஆசைகட்கும் பொது அடிப்படையாகிய அவாவை இடைவிடாது செம்பொரு ளுணர்வால் விலக்குதல். இது காமவெகுளி மயக்கக்கேட்டின் தொடர்ச்சியாம்.

361. அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றுந்
தவாஅப் பிறப்பீனும் வித்து.

(இ-ரை.) எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாப் பிறப்பு ஈனும் வித்து - எல்லா வுயிர்கட்கும் எக்காலத்தும் கெடாது வருகின்ற பிறப்பை விளை விக்கும் வித்து; அவா என்ப - அவா என்று சொல்வர் மெய்ப்பொருள் நூலார்.

உடம்பு நீங்குங் காலத்து, அடுத்து நுகரவேண்டிய வினையும் அது காட்டும் பிறவி வகுப்புக் குறியும் அவ் வகுப்பின்கண் அவாவும் உயிரின் கண் முறையே தோன்றி, அவ் வுயிரை அவ்வவா, அவ் வகுப்பின்கண் கொண்டு செல்லுமாகலின், அதனைப் 'பிறப்பீனும் வித்து' என்றார். எல்லாவுயிரும் என்றது விலங்கு, நரகர், மக்கள், தேவர் என்னும் நால்வகுப் புயிர்களையும். 'தவாஅ' இசைநிறை யளபடை.

362.வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.

(இ-ரை.) வேண்டுங்கால் பிறவாமை வேண்டும் - பிறப்பெல்லாந்துன்பமாதலை யறிந்தவன் ஒன்றை விரும்பின் பிறவாமையைத் தான் விரும்புவான்; அது வேண்டாமை வேண்ட வரும் - அப் பிறவாமை ஒரு பொருளின் மேலும் ஆசைகொள்ளாமையை விரும்பி மேற்கொள்ளின் அவனுக்குத் தானே வந்து சேரும்.

தொடக்கமிலியாகப் பிறப்புப் பிணிமூப்புச் சாக்காட்டால் தொடர்ந்து துன்பமுற்று வருகின்றவனுக்கு. இயல்பாகவே பிறவி நீக்கத்தின்மேல் ஆசையுண்டாகு மாதலால், பிறவாமை வேண்டும் என்றார். 'வேண்டும் செய்யும் என்னும் வினைமுற்று. 'வேண்ட' என்றது வேண்டி மேற்கொள்ளுதலை. 'மற்று' வினைமாற் றிடைச்சொல். இதில் வந்துள்ளது சொற்பொருட்பின்வருநிலையணி.

363. வேண்டாமை யன்ன விழுச்செல்வ மீண்டில்லை
யாண்டு மஃதொப்ப தில்.