பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - துறவறவியல் - அவாவறுத்தல்

223



366. அஞ்சுவ தோரு மறனே யொருவனை வஞ்சிப்ப தோரு மவா.

(இ-ரை.) ஒருவனை வஞ்சிப்பது அவா - அருளுடைமை முதல் மெய்யுணர்தல் ஈறாகச் சொல்லப்பட்ட எல்லாத் துறவறங்களையும் கடைப்பிடித்து வீடுபெறும் நிலையிலுள்ள ஒருவனையும், சோர்வு கண்டு புகுந்து மீண்டும் பிறப்பின்கண் வீழ்த்திக் கெடுக்கவல்லது அவாவாம்; அஞ்சுவதே அறன் - ஆதலால் அவ் வவாவிற்கு அஞ்சி அது நேராதவாறு காத்துக் கொள்வதே இறுதியில் மேற்கொள்ள வேண்டிய அறமாம்.

தொடக்கமிலியாக வந்த அவா. முற்றத் துறந்தவன் ஒரோவழிச் செம்பொருள் காண்டலை யொழிந்து கவனக் குறைவால் தன்னைக் காவானாயின், அது வழியாக அவனறியாமற் புகுந்து மீண்டும் பிறப்பினை யுண்டாக்கு மாதலான், அதனை 'வஞ்சிப்பது' என்றார். அது வராமற் காத்தலாவது இடைவிடாது உள்ளத்தில் ஊன்றுதல். 'ஒரும்' ஈரிடத்தும் அசைநிலை.பிரித்துக் கூட்டப்பட்ட ஏகாரம் பிரிநிலை.

367. அவாவினை யாற்ற வறுப்பிற் றவாவினை தான்வேண்டு மாற்றான் வரும்.

(இ-ரை.) அவாவினை ஆற்ற அறுப்பின் - ஒருவன் அவாவிற்கு அஞ்சி அதை முற்றுங் கெடுக்க வல்லனாயின்; தவா வினை தான் வேண்டும் ஆற்றான் வரும் - அவன் கெடாமைக் கேதுவாகிய வினை அவன் விரும்பியவாறே உண்டாகும்.

கெடாமை பிறவித்துன்பங்களால் அழியாமை. அதற்கேதுவாகிய வினை மேற்கூறிய துறவறங்கள். 'வினை' வகுப்பொருமை, விரும்பியவாறாவது துன்பமில்லாதவகை.

368. அவாவில்லார்க் கில்லாகுந் துன்ப மஃதுண்டேற் றவாஅது மேன்மேல் வரும்.

(இ-ரை.) அவா இல்லார்க்குத்துன்பம் இல்லாகும் - அவா இல்லாதார்க்கு அதனால் வருந் துன்பமுமில்லை: அஃது உண்டேல் தவாஅது மேல்மேல் வரும் - அது இருப்பின் (அது உள்ளவர்க்கு) அதனால் எல்லாத்துன்பங்களும் விடாது வந்து கொண்டேயிருக்கும்.

அவாவுள்ளவர்க்கு வருவன தன்னாலும் பிறவுயிர்களாலும் தெய்வத்தாலும் வரும் மூவகைத்துன்பங்களுமாம். 'தவாஅது' இசைநிறை யளபெடை