பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224

திருக்குறள்

தமிழ் மரபுரை


369. இன்ப மிடையறா தீண்டு மவாவென்னுந்

துன்பத்துட் டுன்பங் கெடின்.


(இ-ரை.) அவா என்னும் துன்பத்துள் துன்பம் கெடின் - அவா என்று சொல்லப்படும் கடுந்துன்பம் ஒருவர்க்குக் கெடுமாயின்; இன்பம் இடையறாது ஈண்டும் - அவர் வீடு பெற்ற பின்பு மட்டுமன்றி அதற்கு முன்பு இங்கு உடம்போடு நின்றவிடத்தும் இன்பம் இடைவிடாது தொடரும்.

துன்பத்துள் துன்பமாவது, பிற துன்பங்களெல்லாந் துன்பமாகத் தோன்றாவாறு பொறுக்குந்தன்மையற்ற துன்பம். அவாவினா லுண்டாகுந் துன்பத்தை அவாவென்னுந் துன்பமென்று கரணகத்தைக் கருமகமாகச் சார்த்திக் கூறினார். பரம்பொருளொடு உள்ளத்தாற் கூடுதலே பேரின்பமாகலின், அவாவறுத்து அங்ஙனஞ் செய்தார் உடம்போடு கூடிநின்றவிடத்தும் அவ் வின்பந் துய்ப்பர் என்பது இங்குக் கூறப்பட்டது.

370. ஆரா வியற்கை யவாநீப்பி னந்நிலையே

பேரா வியற்கை தரும்.

(இ-ரை.) ஆரா இயற்கை அவா நீப்பின் - ஒருபோதும் நிரம்பாத இயல்பையுடைய அவாவை ஒருவன் விடுவானாயின்; அந் நிலையே பேரா இயற்கை தரும் - அவ் விடுகை அப்பொழுதே அவனுக்கு ஒருகாலும் மாறாத இயல்பையுடைய பேரின்பத்தைத் தரும்.

நிரம்பாமையாவது எத்துணைப் பொருள் பெறினும், அவற்றைக் கொண்டு எத்துணைக் காலம் இன்பம் நுகரினும், மனம் பொந்திகை (திருப்தி) யடையாமை.

'ஆசைக்கோ ரளவில்லை யகிலமெல் லாங்கட்டி

யாளினுங் கடன்மீதிலே

ஆணைசெல வேநினைவ ரளகேச னிகராக

அம்பொன்மிக வைத்தபேரும்

நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்

நெடுநா ளிருந்தபேரும்

நிலையாக வேயினுங் காயகற் பந்தேடி

நெஞ்சுபுண் ணாவரெல்லாம்"

என்றார் தாயுமானவர். இங்ஙனம் இயல்பாகவுள்ள நிரம்பாத்தன்மை இளமை, யாக்கை, உடல்நலம், செல்வம், உறவு முதலியவற்றின் நிலையாமையாலும்