பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - ஊழியல் - ஊழ்

227



முன்னோர் தேட்டாகப் பிறர் முயற்சியாலும் வரும். அங்ஙனமே ஒருவன் செல்வத்திற்கு அழிவு அவன் செயலாலும் வரும்; கள்வர் பகைவர் முதலிய பிறர் செயலாலும் வரும். ஒருவனுக்குச் செல்வத்தின் ஆக்கம் போன்றே அழிவும் பிறரால் மட்டுமன்றித் தன்னாலும் நேருமாறு, ஊழே முயற்சியையும் சோம்பலையும் தோற்றுவிக்கு மென்பது இங்குக் கூறப்பட்டது. 'கைப்பொருள்' என்பது முன்னும் பின்னுஞ் சென்றியைதலால் தாப்பிசைப் பொருள்கோளும் இடைநிலை விளக்கணியுமாகும்.

372. பேதைப் படுக்கு மிழவூ ழறிவகற்று
மாகலூ ழுற்றக் கடை.

(இ-ரை.) இழவு ஊழ் (உற்றக்கடை பேதைப்படுக்கும் - ஒருவன் தன் செல்வத்தை இழத்தற்குக் கரணகமான தீயூழ் வந்துற்றவிடத்து, அது அவன் எத்துணைப் பேரறிஞனா யிருந்தாலும் அவனைப் பேதையாக்கும்; ஆகல்ஊழ் உற்றக்கடை அறிவு அகற்றும் - இதற்கு மாறாக, அவனுக்குச் செல்வஞ் சேர்வதற்கேற்ற நல்லூழ் வந்துற்றவிடத்து, அது அவன் எத்துணைப் பேதையாயிருந்தாலும் அவனைப் பேரறிஞனாக்கும்.

செல்வம் என்பது அதிகாரத்தால் வந்தது. 'இழவூழ்' 'ஆகலூழ் என்பன 4ஆம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை. உற்றக்கடை என்பது இறுதிநிலை விளக்கணி. மேற்கூறிய முயற்சிக்கும் சோம்பற்கும் ஏதுவான நிலைமைகள் இங்குக் கூறப்பட்டன.

373. நுண்ணிய நூல்பல கற்பினு மற்றுந்தன்
னுண்மை யறிவே மிகும்.

(இ-ரை.) நுண்ணிய பல நூல் கற்பினும் - பேதைப்படுத்தும் தீயூழுள்ள ஒருவன் நுண்ணிய பொருள்களை யுணர்த்தும் பல நூல்களைக் கற்றாலும்; மற்றும் தன் உண்மை அறிவே மிகும் - அவனுக்குப் பின்னும் அவ் வூழா லாகிய பேதைமை யுணர்வே மேற்படும்.

பொருளின் நுண்மை நூல்மே லேற்றப்பட்டது. மேற்படுதல் நுண் ணூலறிவை முற்றும் மறைத்தல். அதனால் தீயூழினர்க்கு இழப்பைத் தடுக்க நூலறிவு பயன்படா தென்பதாம்.

374. இருவே றுலகத் தியற்கை திருவேறு

தெள்ளிய ராதலும் வேறு.