பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - ஊழியல் - ஊழ்

229


காரத்தால் வந்தன. பொருளீட்டும் முயற்சிக்குரிய துணைக் கரணகங்களும் ஊழால் வேறுபடு மென்பது இங்குக் கூறப்பட்டது.

376. பரியினு மாகாவாம் பாலல்ல வுய்த்துச்

    சொரியினும் போகா தம.

(இரை.) பால் அல்ல பரியினும் ஆகாவாம் - ஊழால் தமக்கு உரியவல்லாத பொருள்கள் வருந்திக் காப்பினும் தம்மிடத்து நில்லாவாம்; தம உய்த்துச் சொரியினும் போகா - ஊழால் தமக்குரிய பொருள்கள் வெளியே கொண்டுபோய்க் கொட்டினும் தம்மைவிட்டு நீங்கா.

பொருள்களின் இருப்பும் போக்கும் ஊழாலன்றிக் காப்பாலும் காவாமையாலும் நிகழா என்பதாம்.

377. வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி

    தொகுத்தார்க்குந் துய்த்த லரிது.

(இ-ரை.) வகுத்தான் வகுத்த வகை அல்லால் - ஊழ்த் தெய்வம் அவரவர்க்கு இன்பதுன்பம் வகுத்த வகைப்படி யல்லாமல்; கோடி தொகுத்தார்க்கும் - கோடிக்கணக்கிற் பொருளை வருந்தி யீட்டியவர்க்கும்; துய்த்தல் அரிது - அப் பொருளால் இன்பம் நுகர்தல் உண்டாகாது.

தீயூழுடையான் செல்வந் தேடுவதற்கு நல்ல நிலைமைகளும் தீயனவாக முடியுமென்று மேற்கூறினார். இனி, நல்ல நிலைமைகள் நல்லனவாகவே முடிந்து செல்வஞ் சேரினும் அச் செல்வத்தை அவன் நுகரக் கொடுத்து வைக்கப்பெறான் என்று இங்குக் கூறினார். ஒருவன் தான் தேடினதைத் தான் நுகராமை நோய், மூப்பு, சாக்காடு, கருமித்தனம், களவு, கவர்வு இயற்கைச்சேதம் முதலிய பல கரணகங்களால் நேர்வதாம்.

"பால்வரை தெய்வம் வினையே பூதம் ................................... பால்பிரிந் திசையா வுயர்திணை மேன." (கிளவி.58)

"நின்றாங் கிசைத்தல் இவணியல் பின்றே” (கிளவி.56)

"இசைத்தலு முரிய வேறிடத் தான” (கிளவி.60)

என்னும் தொல்காப்பிய நெறிப்படி, 'வகுத்தது' என்று சொல்லால் அஃறிணை யாயிருப்பது 'வகுத்தான்' என்று உயர்திணையாயிற்று. 'கோடி' என்பது பால்