பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

திருக்குறள்

தமிழ் மரபுரை


பகா வஃறிணைப் பெயராகக் கொள்ளப்படும். அவ் வெண் இங்குப் பொருள்களை மட்டுமன்றி உயர்ந்த காசையுங் குறிக்கும். ஒருவன் செல்வத்தைக் காசுவகையில் மதிப்பதே வழக்கமாதலாலும், காசைக்கொண்டு எல்லா நுகர்பொருள்களையும் என்றும் பெறலாமாதலாலும், பொருள்களை விளைப்போரும் தொகுப்போரும் பெறுவோரும் தம் நுகர்ச்சிக்கு மிஞ்சியவற்றைக் காசாக மாற்றிவிடுவ ராதலாலும், இட்டுவைக்க இடமில்லாவாறும் நாட்பட்டுக் கெடுமாறும் முன்பின் வேண்டிய பொருள்களை யெல்லாம் ஒருங்கே வாங்குவா ரின்மையாலும், கோடியென்பது பொருட்டொகை யென்பதினுங் காசுத்தொகை யென்பதே பொருத்தமாம். கோடி யென்னும் பெருந்தொகை தொகுத்தார்க்கும் என்னும் சிறப்பும்மை தொக்கது.

378. துறப்பார்மற் றுப்புர வில்லா குறற்பால

    வூட்டா கழியு மெனின்.

(இ-ரை.) உறல் பால ஊட்டா கழியும் எனின் - அடைய வேண்டிய துன்பங்களை அடைவிக்காது தீயூழ்கள் நீங்குமாயின்; துப்புரவு இல்லார் மன் துறப்பர் - நுகர்ச்சி யில்லாத வறியர் பெரும்பாலும் துறவியராவர்.

பரிமேலழகர் ஒழியிசைப் பொருளாகக் கூறுவது பாவிலேயே அடங்கி யிருத்தலால், மன்னிடைச் சொற்கு மிகுதிப்பொருள் கொள்ளப்பெற்றது. துன்பங்களின் பன்மைபற்றி அவற்றை யூட்டும் ஊழையும் பன்மையாகக் கொண்டார். வலிமிகாமையால் 'ஊட்டா' எதிர்மறை முற்றெச்சம். துறவுநிலை இயற்கையாக அமைந்திருந்தும் அதை வீடுபேற்றிற்குப் பயன்படுத்தாவாறு ஊழ்கெடுக்குமென்பது இங்குக் கூறப்பட்டது.

379. நன்றாங்கா னல்லவாக் காண்பவ ரன்றாங்கா

    லல்லற் படுவ தெவன்.

(இ-ரை.) நன்று ஆம்கால் நல்லவாக் காண்பவர் - நல்வினைப் பயன்களாகிய இன்பங்கள் நேருங்கால் அவற்றை நல்லவையென்று முழுமனத்துடன் ஏற்று நுகர்பவர்; அன்று ஆம் கால் அல்லல் படுவது எவன் - மற்றத் தீவினைப் பயன்களாகிய துன்பங்கள் நேருங்கால் அவற்றையும் அவ்வாறே ஏற்று நுகராது துன்புறுவது ஏனோ?

இருவினையுந் தாமே செய்தவையாதலாலும், வினைப்பயன் எவரையும் விடாமையாலும், அவற்றுள் ஒன்றன் பயனைமட்டும் ஏற்று நுகர்ந்துவிட்டு இன்னொன்றன் பயனை ஏற்காது வருந்துவது அறிவன் றென்பதாம்.