பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

29



திருக்குறளிற் சொல்லப்பட்டுள்ள பொருள்களெல்லாம் தூய தமிழ்ச் செய்திகளே. ஆரியத்தைக் கண்டித்தற்கென்றே நூலியற்றியவர் எங்ஙனம் ஆரியச் செய்திகளைத் தழுவ முடியும்? இயன்றவிட மெல்லாம் வலிந்தும் நலிந்தும் ஆரிய மூலங்காட்டும் பரிமேலழகரும்.

“இன்றி யமையாச் சிறப்பின வாயினும்
குன்ற வருப விடல்” (961)

என்னுங் குறட் சிறப்புரையில், "இறப்ப வருவழி இளிவந்தன செய்தாயினும் உய்கவென்னும் வடநூன் முறைமையை மறுத்து, உடம்பினது நிலையின்மையையும் மானத்தினது நிலையுடைமையையுந் தூக்கி அவை செய்யற்க வென்பதாம்" என்று வரைந்திருத்தல் காண்க.

செய்யுட் சிறப்பு

திருக்குறள்போற் குறள்வெண்பாவிற்குச் சிறந்த நூல் முன்னுமில்லை; பின்னுமில்லை. ஒவ்வொரு குறளும் ஒவ்வொரு வகையில் ஒளிவிடும் மணிபோல்வதாம்.

எ-டு:
"தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யு மழை", (55)

"மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன்
நன்கல நன்மக்கட் பேறு" (60)

என்பன இன்னோசையுள்ளன.

"இயற்றலு மீட்டலுங் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு", (385)

"பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்”, (751)

“உழுவா ருலகத்திற் காணியஃ தாற்றா
தெழுவாரை யெல்லாம் பொறுத்து", (1032)

"இரந்து முயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக வுலகியற்றி யான்”, (1062)

"கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும்
ஒண்டொடி கண்ணே யுள", (1101)

என்பன பொருட்சிறப் புள்ளன.