பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

திருக்குறள்

தமிழ் மரபுரை



"அரசிய லையைந் தமைச்சிய வீரைந்
துரைநா டரண்பொரு ளொவ்வொன் - நுரைசால்
படையிரண்டு நட்புப் பதினேழ்பன் மூன்று
குடியெழுபான் றொக்கபொருட் கூறு"

என்பது திருவள்ளுவமாலை.

12. பரிமேலழகர் நச்சுக் கருத்துகள்

அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலுமாம்.

ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப் பட்ட பிரமசரிய முதலிய நிலைகளினின்று. அவ்வவற்றிற் கோதிய அறங்களின் வழுவாதொழுகுதல்.

அதுதான் (அறம்) நால்வகை நிலைத்தாய் வருணந்தோறும் வேறுபாடுடைமையின். சிறுபான்மையாகிய அச்சிறப்பியல்புக ளொழித்து... கூறப்பட்டது. (உரைப்பாயிரம்)

இவ் வாழ்த்து ஏற்புடைக் கடவுளை யெனவறிக; என்னை? சத்துவ முதலிய குணங்களான் மூன்றாகிய உறுதிப்பொருட்கு, அவற்றான் மூவராகிய முதற்கடவுளோடு இயைபுண்டாகலான். அம் மூன்று பொருளையுங் கூறலுற்றார்க்கு அம் மூவரையும் வாழ்த்துதல் முறைமையாகலின், இவ் வாழ்த்து அம் மூவர்க்கும் பொதுப்படக் கூறினாரென வுணர்க (கடவுள் வாழ்த்து அதிகார முகவுரை).

தமிழெழுத்திற்கேயன்றி வடவெழுத்திற்கும் முதலாதல் நோக்கி 'எழுத்தெல்லா' மென்றார். (1) தத்துவ மிருபத்தைந்தினையுந் தெரிதலாவது.......சாங்கிய நூலு ளோதியவாற்றான் ஆராய்தல். (27)

ஏனை மூவராவார், ஆசாரியனிடத்தினின் றோதுதலும் விரதங்காத்தலுமாகிய பிரமசரிய வொழுக்கத்தானும், இல்லைவிட்டு வனத்தின்கட்டீயொடு சென்று மனையாள் வழிபடத் தவஞ்செய்யு மொழுக்கத்தானும், முற்றத் துறந்த யோகவொழுக்கத்தானுமென இவர். (41)

பிதிரராவார் படைப்புக்காலத்து அயனாற் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி; அவர்க்கிடம் தென்றிசையாதலின், 'தென்புலத்தா' ரென்றார். (43)