பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

திருக்குறள்

தமிழ் மரபுரை


பாட்டினை அறம்பொருளின்பமென வடநூல் வழக்குப்பற்றி யோதுதலான், அவ்வாறே யவற்றைப் பிரிவின் கணடக்கினாரென்க. இனி, அவை தம்மையே தமிழ் நூல்களோடும் பொருந்தப் புணர்ச்சியைக் களவென்றும் பிரிவைக் கற்பென்றும் பெரும்பான்மைபற்றி வகுத்து, அவற்றைச் சுவை. மிகுதி பயப்ப உலக நடையோடு ஒப்பு மொவ்வாமையு முடையவாக்கிக் கூறுகின்றார். (காமத்துப்பால் முகவுரை)

ஈண்டுப் பிரிவினை வடநூன்மதம் பற்றிச் செலவு ஆற்றாமை விதுப்புப் புலவியென நால்வகைத் தாக்கிக் கூறினார். அவற்றுட் செலவு பிரிவாற்றாமையுள்ளும், ஆற்றாமை படர்மெலிந்திரங்கன் முதல் நிறையழித லீறாயவற்றுள்ளும், விதுப்பு அவர்வயின் விதும்பன் முதற் புணர்ச்சி விதும்ப லீறாயவற்றுள்ளும், புலவி நெஞ்சொடு புலத்தன் முதல் ஊடலுவகை யீறாயவற்றுள்ளுங் கண்டு கொள்க. அஃதேல், வடநூலார் இவற்றுடனே சாபத்தினானாய நீக்கத்தையுங் கூட்டிப் பிரிவினை ஐவகைத் தென்றாராலெனின், அஃது அறம்பொருளின்ப மென்னும் பயன்களுள் ஒன்றுபற்றிய பிரிவின்மையானும், முனிவராணையான் ஒருகாலத்தோர் குற்றத் துளதாவதல்லது உலகியல்பாய் வாராமையானும். ஈண்டொழிக்கப்பட்ட தென்க. (காமத்துப்பால் முடிவுரை)

ஏனைக் கருத்துக்களை ஆங்காங்கு உரையிற் காண்க.