பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - பாயிரவியல் - வான்சிறப்பு

47



(இ-ரை.) புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் - மழையென்னும் வரு வாய் வரவற்றுவிடின், உழவர் ஏரின் உழார் - உலகத்திற்கு ஆணியாகிய உழவர் தமக்கும் பிறர்க்கும் உணவு விளைவிக்குமாறு ஏரால் உழுதலைச் செய்யார்.


சுழல்காற்று மழையைக் குறிக்கும் புயல்(cyclone) என்னும் சொல் இங்குப் பொதுப்பொருளில் ஆளப்பட்டது. பசி உயிர்களை வருத்துதற்குக் கரணியங் கூறியவாறு.

உழாஅர் என்பது இசைநிறை யளபெடை. குன்றியக்கால் என்பது குன்றிக்கால் எனக் குறைந்து நின்றது. குன்றுதல் இங்கு இன்மையாதல்.


15.கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
 யெடுப்பதூஉ மெல்லா மழை.


(இ-ரை.) கெடுப்பதும் - பெய்யாது நின்று பண்பாட்டிலும் தொழிலிலும் மக்களைக் கெடுப்பதும்; கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே எடுப்பதும் அங்ஙனங் கெட்டார்க்குத் துணையாகப் பெய்து முன்பு கெடுத்தது போன்றே பின்பு அவரைத் தூக்கிவிடுவதும்; எல்லாம் மழை - ஆகிய எல்லாம் செய் வது மழையே.


"தனக்கு மிஞ்சித் தானம்." ஆதலால், வளமில்லாக் காலத்தில் வள்ளன்மை இல்லாதாரின் பண்பாடு கெடுவதும். விளைபொருளும் கருவிப் பொருளும் இல்லாக்காலத்தில் வணிகர் கைத்தொழிலாளர் ஆகியோரின் தொழில் கெடுவதும் இயல்பாதலாலும்; மழையில்லாப் பஞ்சக்காலம் நெடிதுங் குறிதுமாக இடையிடை நேரினும், பின்பு இறைவனருளால் மீண்டும் மழை பெய்து மக்கட்பண்பாடும் தொழிலும் முன்போல் திருந்துவதனாலும்; கெடுப் பதும் எடுப்பதுமாகிய இரு முரண்பட்ட செயலையும் மழை செய்வதாகக் கூறினார். ஆயினும், காலத்திற்கேற்ப மக்கள் நிலைமை மாறும் என்பதும், இடை யிடை நிற்பினும் அறுதியாய் நின்றுவிடாது உலகம் அழியும்வரை மழை பெய்துவரும் என்பதும், மழை பெய்யாமைக்கு ஏதேனும் ஒரு கரணியம் இருத்தல் வேண்டும் என்பதும், குறிப்பாக உணர்த்தப்பெறும் உண்மைக ளாகும். செல்வமிழந்தவரைக் கெட்டார் என்பது இருவகை வழக்கிலுமுண்டு.


கெடுப்பதூஉம் எடுப்பதூஉம் என்பன இன்னிசை யளபெடை. 'மற்று' வினைமாற் றிடைச்சொல். 'ஆங்கு' உவமையுருபு.