பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - பாயிரவியல் - நீத்தார் பெருமை

51


வாழ்விற்கு வேண்டியவருமான, முற்றத் துறந்த முழு முனிவரின் பெருமை கூறுதல்.

21.

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவற் றுணிவு.

(இ-ரை.) பனுவல் துணிவு - நூல்களது துணிவு; ஒழுக்கத்து நீத்தார் பெருமை - தமக்குரிய ஒழுக்கத்தின்கண் உறைத்து நின்று உலகப்பற்றைத் துறந்த முனிவரது பெருமையை: விழுப்பத்து வேண்டும் பொருள் எல்லாவற்றுள்ளும் சிறந்ததாக விரும்பும்.

ஆசிரியர் துணிவு அவர் நூல்மேல் ஏற்றப்பட்டது.

"தொண்டரோ இறைவ னுள்ளத் தொடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே"

என்னும் ஒளவையார் கூற்றைத் தழுவியது இக் குறள். பற்று, 'நான்' என்று தன்னைப்பற்றிய அகப்பற்றும், 'எனது' என்று தன் உடைமைகளைப்பற்றிய புறப்பற்றும் என இருவகையாம்.

22.

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று.

(இ-ரை.) துறந்தார் பெருமை துணைக்கூறின் - இருவகைப் பற்றையும் முற்றும் விட்டுவிட்ட முனிவரது பெருமையை இவ்வளவின தென்று அளவிட்டுக் கூறப்புகின்; வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று - அது இவ் வுலகத்தில் இதுவரை பிறந்திறந்தவரை யெல்லாம் இத்தனையர் என எண்ணியறியப் புகுந்தாற்போல்வதாம்.

இரண்டும் முடியாதென்பது. கொண்டால் என்னும் வினையெச்சம் கொண்டு எனத் திரிந்தது. கொண்ட அற்று எனினுமாம்.

23.

இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு.

(இ-ரை.) இருமை வகை தெரிந்து - பிறப்பு வீடு என்னும் இரண்டின் துன்பவின்பக் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து; ஈண்டு அறம் பூண்டார்