பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

திருக்குறள்

தமிழ் மரபுரை



சந்ததமு மிளமையோ டிருக்கலா மற்றொரு
        சரீரத் தினும்புகுதலாம்
சலமே னடக்கலாம் கனன்மே லிருக்கலாம்
        தன்னிகரில் சித்திபெறலாம்
சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற
        திறமரிது”

என்றார் தாயுமான அடிகள். ஆதலால், மனமடக்குதலும் அவாவறுத்தலுமே செயற்கரிய செயல்கள் என அறிக.

செயற்கெளியவாவன உலகத்தொழில் செய்தலும் பொருளீட்டுதலும் இன்பந்துய்த்தலும் எளியாரை வாட்டுதலுமாம். இல்லறம் துறவறத்தை நோக்க எளிதாயினும், அதையுஞ் செய்ய இயலாதவர் சிலர் உளர். அவரே சிறியர் என்னுங் கருத்தினர், "செயற்குரிய செய்கலா தார்" என்று பாடவேறுபாடு காட்டுவர். அவ்வேறுபாடு பெரியர் சிறியர் என்னும் இரு வகுப்பார்க்கும் இடையே வேறொரு வகுப்பாரையும் வேண்டுதலின், அது அத்துணைச் சிறந்ததன்றாம்.

27.

சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே யுலகு.

(இ-ரை.) சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்தின் வகை - சுவை, ஒளி, ஊறு, ஓசை, மணம் என்னும் பூதமூலங்கள் ஐந்தின் கூறுபாட்டையும்; தெரிவான்கட்டே உலகு - ஆராய்ந்தறியும் ஓகியின் அறிவிற்குள் அடங்கியதே உலகம்.

காட்சி ஒளியினால் தோன்றுதலின் ஒளியெனப்பட்டது. உறுவது ஊறு. உறுதலாவது உடம்பின் உள்ளும் புறம்பும் படுதல் அல்லது தொடுதல். உலக வழக்கில் தீய பொருளிலேயே வழங்கும் நாற்றம் என்னும் சொல், இங்கு நறுமைக்குந் தீமைக்கும் பொதுவாய் நின்றது.

உகு-யுஜ் (வ.). ஓகம் - யோக (வ.g).ஓகி-யோகின் (வ. g).

ஐந்தின் கூறுபாடாவன, மேற்கூறிய பூதமூலம் ஐந்தும், அவற்றின்கண் தோன்றிய நிலம், நீர், தீ, வளி(காற்று), வெளி என்னும் பூதங்கள் ஐந்தும், அவற்றொடு தொடர்புடைய புலனைக்கொண்ட மெய், வாய், கண், மூக்கு,