பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

திருக்குறள்

தமிழ் மரபுரை



(இ-ரை.) தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று - இறந்த முன்னோர் வழிபடுதெய்வம் விருந்தினர் ஏழையுறவினர் தன் குடும்பம் என்று சொல்லப்படும்; ஆங்கு ஐம்புலத்து ஆறு ஓம்பல் - அவ்வைந்திடத் தும் செய்யவேண்டிய அறவினைகளைப்பேணிச் செய்தல்; தலை - இல்லறத்தானுக்குத் தலையாய கடமையாம்.

பரிமேலழகர் 'தென்புலத்தார்' என்னுஞ் சொற்குப் 'பிதிரர்' என்று பொருளுரைத்து, "பிதிரராவார் படைப்புக் காலத்து அயனாற் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி" என்பர்.

முதற்காலத் தமிழகமாகிய குமரிநாடு பல்வேறு கடல்கோள்களால் மூழ்கிப் போனமையால், அது இருந்த தென்றிசை, கூற்றுவன் திசையாகவும் இறந்தோரின் இருப்பிடமாகவும் கொள்ளப்பட்டது. தென்புலத்தார்க்குச் செய் யும் அறவினையாவது, அவர் ஆவி ஆறுதலும் மகிழ்வும் அடைதற் பொருட்டு, அவர் இறந்த நாளில் தெய்வத்திற்குப் படைப்பதுபோல் அடையாள முறையில் சில வுண்டிகளை அவர்க்கும் படைத்து, அவர் பெயரால் துறவியர்க்கும் இரப்போர்க்கும் சிறந்த உணவும் புத்தாடையும் உதவுதல். தெய்வம் என்றது அவரவர் உளநிலைக் கேற்றவாறு சிறுதெய்வமும் பெருந் தேவனும் கடவுளுமாகிய மூவகைத் தேவுகளை. கோயிற்கும் அடியார்க்கும் செய்யும் தானங்களும் தெய்வ வழிபாட்டின்பாற் படும். விருந்து என்றது புதிதாக வரும் மதிப்புள்ள அயலாரை. அவரை வரவேற்றுச் சிறந்த உண வளிப்பது இக்காலத்து வழக்கற்றது. அயலூரினின்று வந்த உறவினர்க்குச் சிறந்த வுணவளிப்பது கைம்மாறு கருதிய கடமையேயன்றி அறமாகாது.தான் என்றது தன்னையுந் தன் குடும்பத்தையும். "உண்டி முதற்றே யுணவின் பிண்டம்" (புறம்.18), "உடம்பா ரழியின் உயிரா ரழிவர்" (திருமந். 724). ஆதலால், ஒருவன் தன் குடும்பத்தைக் கவனியாது பிறரைப் பேணுதலும் அறமாகாது.

இங்குக் குறிக்கப்பட்ட ஐந்திட வினைகளும் அறவினையாகவே, ஆறாவது இடமாகிய அரசிற்குச் செலுத்தவேண்டிய வரி கட்டாய வினையாகிய கடமையாயிற்று, ஆறிலொரு கடமையிறுத்தல் என்னும் பண்டை வழக்கும், உழவனையே இல்லறத்தாருட் சிறந்தவனாகக் காட்டும். பிறதொழிலார் எல்லாரும் பெரும்பாலும் குறிப்பிட்ட சிறுதொகைப் பணத்தையே வரியாகச் செலுத்திவந்தனர்.

"பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்" (1034)

என்று திருவள்ளுவரும்.