பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - இல்லறவியல் - வாழ்க்கைத் துணைநலம்

71


லாதது எது? இல்லவள் மாணாக்கடை உள்ளது என் - அம் மனைவி அச்சிறப்பில்லாதவளானால் அவளுக்கு உள்ளது எது?

மாண்பு என்னும் பண்பின் பெயர் பண்பியின்மேல் நின்றது. இல்லறத் திற்கு முதன்மையாக வேண்டுவது மனைவியின் குணச்சிறப்பே என்பது இதனாற் கூறப்பட்டது.

54.

பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந்
திண்மையுண் டாகப் பெறின்.

(இ-ரை.) பெண்ணின் பெருந்தக்க யா உள - ஒருவன் இவ் வுலகத்திற் பெறக்கூடிய பொருள்களுள் மனைவியினுஞ் சிறந்த தகுதி யுடையவை வேறு எவை உள்ளன? கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - அவளிடத்திற் கற்பு என்னும் கலங்கா நிலைமை மட்டும் அமைந்திருக்குமாயின்.

கற்பு என்பது கற்போல் உறுதியான இருபாலிடைக் காதற்பண்பு. கல்- கற்பு. "கற்பு றுத்திய கற்புடை யாடனை" (அயோத்தி. நகர்நீங்கு. 16) கம்பரும் கூறுதல் காண்க. அது மணப்பருவம் வரை தோன்றாதிருந்து பின்பு ஒருவரையே காதலிப்பது: இருபாற்கும் பொதுவானது. ஆதலின், மனைவியையன்றி அணங்கையும் நோக்காத ஆண்கற்பும் கணவனையன்றிக் காவலனையும் நோக்காத பெண்கற்பும் எனக் கற்பு இருதிறப்பட்டதாம். இங்குக் கூறியது பெண்கற்பு என அறிக. இன்னும் இதன் விளக்கத்தைக் கற்பியலிற் காண்க.

கற்புடை மனைவியால் அறம்பொரு ளின்பப்பேற்றுடன் வாழ்நாளும் நீடிப்பதால், "பெண்ணிற் பெருந்தக்க யாவுள?" என்றார். 'உண்டாகப் பெறின்' என்பது உண்டாதலின் அருமைகுறித்து நின்றது.

55.

தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யு மழை.

(இ-ரை.) தெய்வம் தொழாள் - தான் மணக்கு முன்பு தொழுதுவந்த சிறுதெய்வமாகிய இல்லுறை தெய்வத்தைத் தொழாது; கொழுநன் தொழுது எழுவாள் - தன் கணவன் பாதங்களையே வைகறையிறுதியில் தொட்டுக் கும்பிட்டெழும் கற்புடை மனைவி; பெய் என மழை பெய்யும் - பெய்யென்று சொன்னவுடன் மழை பெய்யும்.