பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

திருக்குறள்

தமிழ் மரபுரை



"அணங்குடை நல்லில்" என்னும் மதுரைக்காஞ்சித் தொடர் (678) இல்லுறை தெய்வத்தைக் குறித்தல் காண்க. சிவனும் திருமாலும் போன்ற பெருந்தேவரைக் கற்புடை மனைவியரும் தத்தம் கணவனாரொடு கூடி வழிபட்டமையை, திருநீலகண்ட நாயனாரின் மனைவியார். மங்கையர்க் கரசியார், காரைக்காலம்மையார் முதலியோர் வாழ்க்கையினின்று அறிந்து கொள்க.

"வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது
நீணில வேந்தர் கொற்றம் சிதையாது
பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு" (சிலப்.15:145-7)

என்னும் பண்டை நம்பிக்கை. நாளடைவில் "பெய்யெனப் பெய்யும் மழை" "வான்றரு கற்பின் மனையறம்" (மணிமே, 22: 53), "மழைதரும் இவள்" (மணிமே.22:93) என்னும் வழக்குகட்கு வழிவகுத்தது போலும்! ஒருகால் வள்ளுவர் குறள் பண்டைக்காலத்து ஒரு பத்தினிப் பெண் செய்த இறும்பூதை (அற்புதத்தை) அடிப்படையாகக் கொண்டதாகவும் இருக்கலாம்.

இனி, "அனிச்சமும்... நெருஞ்சிப்பழம்" என்பதைப்போல் உயர்வு நவிற்சியாகக் கொள்ளின் ஒரு குற்றத்திற்கும் இடமில்லை.

புரட்சிப் பாவலர் பாரதிதாசனார். "கொழுநற் றொழுதெழுவாள் பெய் யெனப் பெய்யும் மழைக்கு ஒப்பாவள்" என்று பொருள் கூறிப் பொருத்தமாக்குவர்.

தொழாஅள் என்பது இசைநிறை யளபெடை

56.

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

(இ-ரை.) தற்காத்து - தன் கற்பையும் உடல்நலத்தையுங் காத்து; தற்கொண்டான் பேணி - தன் கணவனையும் உண்டி மருந்து முழுக்கு முதலியவற்றாற் பேணி; தகைசான்ற சொல்காத்து - தம் இருவரையும்பற்றிய தகுதிவாய்ந்த உலக மதிப்பையுங் காத்து; சோர்விலாள் - பிறர்க்குச் செய்யும் அறவினைகளிலும் தளர்ச்சியில்லாதவள் பெண் - இல்லறத்திற்குச் சிறந்த பெண்ணாவாள்.