பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - இல்லறவியல் - மக்கட்பேறு

75



அறிவு என்பது அறிவைத் தரும் நூலைக் குறித்தலால் கருமிய(காரிய) வாகுபெயர். அறிந்த என்பது தேற்றம்பற்றிய காலவழுவமைதி. பெற்றோர். பேறுகாலம் என்னும் இருசொற்களும் பிள்ளைப்பேற்றின் தலைமையை எடுத்துக் காட்டும்.

62.

எழுபிறப்புந் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

(இ-ரை.) பழிபிறங்காப் பண்பு உடை மக்கள் பெறின் - பழி தோன்றாத நற்குணங்களையுடைய மக்களைப் பெறின்; எழுபிறப்பும் தீயவை தீண்டா - பெற்றோரை எழுபிறவி யளவும் துன்பங்கள் அணுகா.

பண்பு என்றது பெற்றோரை நோக்கி அறஞ் செய்வதற்கேற்ற நற் குணத்தை. பிள்ளைகள் செய்யும் நல்வினையாற் பெற்றோரின் தீவினை தேயும் என்னும் கருத்துப்பற்றி, "எழுபிறப்புந் தீயவை தீண்டா" என்றார். நிலைத்திணை (தாவரம்), நீர்வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு, மக்கள், தேவர் என்னும் எழுவகைப் பிறப்பினும் தீயவை தீண்டா என்பது, பிறப்பின் வகைபற்றியும் தொகைபற்றியும் பொருந்தாமையின், எழு மக்கட்பிறப்பு என உரைக்கப்பட்டது. இதுவும் ஒருவகை உயர்வுநவிற்சியே. ஏழு என்பது ஒரு நிறைவெண்: ஆதலால் நீண்ட காலத்தைக் குறிப்பது.

பிறங்குதல் விளங்குதல். கண்ணோட்டம் அல்லது அச்சம்பற்றி ஒரு வரைப் பிறர் பழியாமலுமிருக்கலாமாதலின், "பிறராற் பழிக்கப்படாத” மக்கள் என்பது முற்றும் பொருந்தாது.

63.

தம்பொரு ளென்பதம் மக்க ளவர்பொரு
டந்தம் வினையான் வரும்.

(இ-ரை.) தம் மக்கள் தம் பொருள் என்ப - தம் மக்களைத் தம் செல்வ மென்று பாராட்டுவர் பெற்றோர்; அவர் பொருள் தம் தம் வினையான் வரும் - அம் மக்களின் மகச்செல்வம் அவரவர் வினைக்கேற்றவாறு வரும்.

இம்மையிலும் மறுமையிலுமாக எதிர்காலத்தில் தம் மக்கள் தமக்குச் செய்யக்கூடிய நன்மையை எள்ளளவும் எதிர்நோக்காதே. அவர்களைக் குழவிப் பருவத்திலும் பிள்ளைப் பருவத்திலும் தம் சிறந்த செல்வமாகப் பாராட்டுவது பெற்றோர் வழக்கம். மக்களைப் பெற்றோரின் உடைமையாகக் குறிக்கும்போதே அவ் வுடைமைகளும் பின்பு பெற்றோரைப்போல உடை