பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




1

இக்காலம்

(20ஆம் நூற்றாண்டு)

1. செய்யுள் உரைநடை யிலக்கியம்

பரிதிமாற் கலைஞன் (1870-1903)

இவர் தம் சூரியநாராயண சாத்திரியார் என்னும் பெயரைப் பரிதிமாற் கலைஞன் என்று மாற்றிக்கொள்ளும் அளவும், தாம் தமிழாசிரியப் பணியாற்றிய கிறித்தவக் கல்லூரியிற் பிராமண மாணவர் முன்பும் பிராமணர் தமிழரை ஏமாற்றிவிட்டனர் என்று சொல்லும் அளவும், தமிழின் உண்மை யியல்புணர்ந்து தமிழ்ப்பற்று விஞ்சிய பிராமணத் தமிழ்ப் புலவர்.

இவர் எழுதியவையும் இயற்றியவையும்: ரூபாவதி, கலாவதி, மானவிசயம் என்னும் நாடக விலக்கியம்; நாடகவியல் என்னும் நாடக விலக்கணம்; தனிப்பாசுரத் தொகை, பாவலர் விருந்து என்னும் தனிப்பாடற் றொகுப்புகள்; மதிவாணன் என்னும் புதினம்; தமிழ்மொழியின் வரலாறு, தமிழ்ப்புலவர் சரித்திரம், மணிய சிவனார் சரித்திரம் என்னும் வரலாறுகள்; சித்திரக்கவி விளக்கம் என்னும் விளக்கவுரை; தமிழ் வியாசங்கள் என்னும் கட்டுரைத் திரட்டு முதலியன

கதிரைவேற் பிள்ளை

இவர் தமிழ் அகரமுதலி 1904-ல் வெளிவந்தது.

நாகலிங்க முதலியார்

இவரது தமிழகரமுதலி 5ஆம் சியார்ச்சு அரசர் தில்லி முடிசூட்டு விழா நினைவு வெளியீடாக 1911-ல் வெளி வந்தது.

பாலவநத்தம் வேள் பாண்டித்துரைத் தேவர் (1867-1911)

பாண்டியர்குடி மறைந்தபின், பாண்டித்துரைத் தேவர் என்னும் ஆண்டகை பாண்டியன் போன்று, நாலாங் கழகம் என்னும்