பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

தமிழ் இலக்கிய வரலாறு


இற்றை மதுரைத் தமிழ்க் கழகத்தை 1901-ல் தோற்று வித்தார். பெரும் புலவரின் அரிய ஆராய்ச்சிகளைக் கொண்ட ‘செந்தமிழ்' என்னும் உயரிய இலக்கிய மாதிகை, இக் கழக இதழாக 1903-ல் வெளிவரத் தொடங்கிற்று. இக்கழக அச்சகத்திற் பல்வகைத் தமிழ்நூல்களும் பனுவல்களும் பிழையின்றி அச்சிடப்பட்டு எளிய விலைக்கு விற்கப்பட்டன. அவற்றுள் சங்கத்தமிழ் அகரமுதலியும் சிங்காரவேல் முதலியாரின் அபிதான சிந்தாமணியும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன.

பாண்டித்துரைத் தேவர் பன்னூற்றிரட்டு என்னும் பாடல் தொகுப்பைத் தொகுத்தார்; 1911-ல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலிக் குழுவுறுப்பினராகி, இறுதிவரை பணி யாற்றினார்.

பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1862-1914)

இவர் நற்றிணைக்கு உரைவரைந்து வெளியிட்டார்.

குமாரசாமிப் பிள்ளை

இவரது இலக்கியச் சொல்லகராதி 1914-ல் வெளிவந்தது.

அராவ ஆண்டகை(ராவ் பஹதூர்) பவானந்தம் பிள்ளை

இவர் ஆங்கிலராட்சியில் காவல்துறையில் இந்தியர் அடையக் கூடிய உச்சநிலைப் பதவி தாங்கி, தமிழ்நாடு காவல் போன்றே தமிழ்க் காவலும் பூண்டு, ஒல்லும் வகையாற் பல்வேறு வகையில் சிறந்த தொண்டாற்றியது, மிகமிகப் பாராட்டத் தக்கது. இறையனாரகப் பொருளுரையும் யாப்பருங்கல விருத்தியும் இவரால் 1916-ல் வெளியிடப்பட் ப்பட்டன. இங்ஙனம் அறிவும் ஆண்மையும் செறிந்தவர் ராவ் பஹதூர் என்னும் அராவ ஆண்டகைப் பட்டம் பெற்றது வியப்பன்று.

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்

இவர் தமிழ்ப் பண்டிதராகவும் மருத்துவப் பண்டிதராகவுமிருந்து, புலத்துறையிலும் நலத்துறையிலும் தலைசிறந்த தொண்டாற்றியதொடு, ஆழ்ந்த இசைத் தமிழாராய்ச்சியும் செய்து 1917ஆம் ஆண்டில் கருணாமிர்த சாகரம் என்னும் பெரு நூலை வெளியிட்டார்.

தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை (1883-1941)

இவர் 1911-ல் கரந்தைத் தமிழ்க் கழகத்தைத் தோற்றவித்தும், 1925-ல் ‘தமிழ்ப்பொழில்' என்னும் உயரிய தமிழ் மாதிகையைத்