பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இக்காலம்

3


தொடங்குவித்தும்,காலமெல்லாம் தமிழின் தூய்மையைப் போற்றிக்காத்த தந்நேரில்லாத் தமிழ ஆண்டகை.

திருவரங்கம் பிள்ளை

இவர் 1920-ல்,சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தோடிணைந்த திருநெல்வேலித் தென்னிந்தியத் தமிழ்க் கழகத்தைத் தோற்றுவித்தும், 1927-ல் ‘செந்தமிழ்ச்செல்வி' என்னும் செந்தமிழ் மாதிகையைத் தொடங்குவித்தும், தமிழைத் தாய்போற் பேணிக் காக்கவும், இந்தியை வன்மையாய் எதிர்க்கவும், திருக்கோயில் தமிழ் வழிபாட்டைப் புதுப்பிக்கவும், தமிழர் தன்மானத்தொடு வாழவும், எல்லாப் புலவரையும் ஒன்றாய் இணைக்கவும், ஆயிரக்கணக்கான செந்தமிழ் நூல்களை அச்சிட்டு நேர்மை விலைக்கு விற்கவும், தமிழ் ஆராய்ச்சியை ஊக்கவும், தமிழை உலகெங்கும் பரப்பவும்,இயன்றவரை தமிழ்ப் பெரும்புலவர்க்குப் பிழைப்பூட்டவும், ஆழ அடிகோலியவர்.

சுப்பிரமணிய பாரதியார் (1882-1921)

இவர் தேசவிடுதலையென்னும் ஆங்கிலராட்சி நீக்கப் போராட்டத் தொடர்பாக, நூற்றுக்கணக்கான தலைப்புப்பற்றி ஏராளமாகப் பாடியுள்ளார். அவற்றுட் பெரும்பாலானவற்றின் மொழிநடையும் சொல்வடிவும் செந்தமிழிலக்கணத்தொடு பொருந்துவன வல்ல. தமிழின் சிறப்பை யுணர்த்தித் தமிழ்ப் பற்றூட்டும் சில பாடல்கள் ஏற்கத்தக்கன.

எ-டு :

“யாமறிந்த மொழிகளிலே
தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம்
பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர்
தேமதுரத் தமிழோசை யுலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.”


செல்வக்கேசவராய முதலியார்

இவர் ஆங்கில முதுகலைப் பட்டம் பெற்ற கல்லூரித் தலைமைத் தமிழாசிரியரேனும், தமிழில் மிகுந்த ஆர்வமுடையவர். இவருடைய திருவள்ளுவர், கம்பன், தமிழ் என்னுந் தலைப்புக் கட்டுரைகளும், ஒரு போகு பழமொழிகள் (Parallel Proverbs) என்னும் தமிழாங்கிலப் பழமொழித் திரட்டும், மிகச் சிறந்தவை.