பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இக்காலம்

15



ஆராய்ச்சி நூல்களை எழுதிச் சை.சி.நூ.ப.கழக வாயிலாக வெளியிட்டுள்ளார். இவர் ஆராய்ச்சி அறிவியன் முறைப் பட்டது.

பேரா. மா.வி. இராசேந்திரனார்

பாளையங்கோட்டைத் தூய சேவியர் கல்லூரி உயிரியற் பேராசிரியர் மா.வி.இராசேந்திரனார் நம் நாட்டுப் பாம்புகள் என்னும் ஆராய்ச்சி நூலை வெளியிட்டுள்ளார்.

சாத்தன்குளம் அ. இராகவனார்

நுண்கலைச் செல்வர் சாத்தன்குளம் அ. இராகவனார் நம் நாட்டுக் கப்பற்கலை, தமிழ்நாட்டு அணிகலன்கள் என்னும் ஆராய்ச்சி நூல்களை எழுதி வெளியிடுவித்துள்ளார்.

புலவர் மு. அருணாசலனார்

இவர், 9ஆம் நூற்றாண்டு முதல் 16ஆம் நூற்றாண்டு வரை, நூற்றாண்டு வாரியாகத் தமிழ் இலக்கிய வரலாறு இதுவரையில்லா வகையில் மிக விரிவாகவும் விளக்கமாகவும் ஆராய்ச்சியாளர் உட்பட அனைவர்க்கும் பயன்படுமாறு, அரும்பாடுபட்டுத் தொகுத் தெழுதிக் காந்தி வித்தியாலய வாயிலாக வெளியிட்டுள்ளார்.

2. ஆங்கிலராட்சியால் விளைந்த நன்மைகள்

மக்கள் மனப்பான்மையும் நிலைமையும் தொழிலும் வெவ்வேறு வகைப்பட்டிருப்பதால், ஒரே நிலைமை அல்லது நிகழ்ச்சி எல்லார்க்கும் நல்லதாயிருப்பதில்லை. ஆதலால், சிறிதேனும் தீமை கலவாத நன்மையுமில்லை; அடைமழைக் காலத்தில் மற்றெல்லாத் தொழிலாளரும் துன்புறினும், குடை வாணிகர், குடையொக்கிடுநர், தாழங்குடை முடைவோர் முதலிய சில தொழிலாளர் இன்புறுவர். இள வெயிற்காலத்தில் இதற்கு நேர்மாறான நிலைமை நேரும்.

“நல்லா ரெனத்தாம் நளிவிரும்பிக் கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக் கொளல்வேண்டும்
நெல்லிற் குமியுண்டு நீர்க்கு நுறையுண்டு
புல்லிதழ் பூவிற்கு முண்டு.” (நாலடி. 221)

என்பது, ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு குறையுண்டு என்பதைத் தெரிவிக்கும்.

ஒரு பொருள் அல்லது நிலைமை நல்லதா தீயதா என்று துணிவதற்கு,