பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

தமிழ் இலக்கிய வரலாறு



“குணநாடிக் குற்றமு நாடி யவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்” (குறள். 504)

என்று, திருவள்ளுவர் ஒரு சிறந்த நெறிமுறை வகுத்திருக்கின்றார்.

இந்த நெறிமுறையைக் கையாளும்போதும் நடுநிலையைக் கடைப்பிடித்தல் வேண்டும் என்பதை,

“காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கண்
ஆய்தல் அறிவுடையார் கண்ணதே - காய்வதன்கண்
உற்ற குணந்தோன்றா தாகும் உவப்பதன்கண்
குற்றமுந் தோன்றாக் கெடும்.” (அறநெறிச். 42)

என்று முனைப்பாடியார் அறிவித்துள்ளார்.

ஆங்கிலராட்சியால் தமிழர்க்கு விளைந்த நன்மை கொஞ்ச நஞ்சமன்று. அது பின்னர் விளக்கப்படும்.

இந்தியா முழுவதையும் நோக்கினும், ஆங்கிலர் ஆட்சியின் நன்மைகள் அளவிறந்தன.

இந்தியா ஓராட்சி நாடானமை

இந்தியா ஒருகாலத்தில் முந்நாடாயிருந்து, பின்னர் முறையே 13, 15, 19, 25, 56 நாடாகப் பல்கி, ஆங்கிலராட்சிக் காலத்தில் 545 நாடாகப் பெருகியிருந்தது. அவற்றுட் பல சிற்றரசுகளாயிருந்து பேரரசுகட்குத் திறை செலுத்தினவேனும், ஆட்சிமுறையிலும் தண்டனையதிகாரத்திலும் கோன்மை (sovereignty) பெற்றேயிருந்தன. ஒரு சிறு நாட்டிற்குள்ளும், காந்தியாரும் நேருவும்போல எத்துனைப் பெரியவரேனும், அரசனுக்கு மாறாகப் பேசிவிட்டு உயிரோடு வீடு திரும்ப முடியாது.

வடக்குந் தெற்கும் கிழக்கும் மேற்கும் மலையுங் கடலும் நிலையான எல்லைகளாக இருந்தனவேனும், வடகிழக்கும் வட மேற்கும் அடிக்கடி எல்லைகள் மாறிக் கொண்டேயிருந்தன.

ஆங்கிலர் இங்கு ஆள வரவில்லை. கிழக்கிந்தியக் குழும்பு (East India Company) எலிசபெத்து அரசியிடம் பட்டயம் பெற்று இங்கு வணிகஞ் செய்யவே வந்தது. அக்காலத்திற் கொள்ளையும் போரும் பெருவழக்கா யிருந்ததனால், கிழக்கிந்தியக் குழும்பார் தம் பண்டசாலைக் காப்பிற்கு நல்ல படை வைத்திருந்தனர். குழும்பைத் தாக்கித் தோற்ற அரசர் கொடுத்த தண்டத்தினாலும், வெற்றியரசர் தமக்குப் படைத்துணை யுதவியதற்காக நல்கிய நன்கொடையாலும், குழும்பின் நிலவுடைமை படிப் படியாகப் பெருகி வரலாயிற்று. எந்த உள்நாட்டரசையும் வெல்லத்தக்க வலிமை பெற்றபின், காப்புத்-