பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இக்காலம்

17


துணையுடன்படிக்கை (Subsidiary Treaty), பிறங்கடையில்லாக் கடப்பு (Annexation by Lapse) ஆளுந்தகுதியில்லா அரசர் நாடிணைப்பு (Annexation of Misruled States), எதிர்த்துத் தோற்ற அரசர் நாடுகவர்வு (Annexation of defeated Enemy's Territory) என்னும் நால்வகை ஆம்புடைகளால், கிழக்கிந்தியக் குழும்பு இந்தியா முழுவதையும் தன் அதிகாரத்திற்குக்கீழ்க் கொண்டு வந்துவிட்டது.

இந்நிலையில், நாடும் பதவியும் இழந்த சில வடநாட்டு அரசரும் தலைவரும் இந்தியப் படைஞரைக் கலகஞ் செய்யத் தூண்டினர். ஏற்கெனவே, சம்பளம் போதாதென்னும் மனக்குறையும் வெளிநாட்டுப் பணிவெறுப்பும் படைஞரிடையிருந்து வந்தன. எல்லா வகுப்பாரையும் படிக்கவைத்து அரசியற் பதவியளித்த வகையில் ஆங்கிலராட்சி பிராமணப் பகையையுந் தேடிக்கொண்டது. ஆகவே, படைஞரின் குடுமியையுங் கொண்டையையுங் கத்தரிக்கச் சொன்னதைக் கிறித்தவராக்கும் முயற்சியென்றும், துமுக்கிக் (துப்பாக்கிக்) குண்டுகள் பதப் படாவாறு சுற்றி யிருந்ததும் சுடுமுன் கடித்தெறிவதுமான மெழுகுத் தாளை இந்திய மதத்தாரிடை மாட்டுக் கொழுப் பென்றும் முகமதிய ரிடைப் பன்றிக்கொழுப்பென்றும், அஞ்சல் துறைக்கு நடப்பட்டிருந்த கம்பங்களையும் அவற்றை யிணைத்த கம்பிகளையும் இந்தியாவை இங்கிலாந்திற்கு இழுத்துச் செல்லும் வலையென்றும் கூறி, மூடநம்பிக்கை மிக்க படைஞரின் கலகவெறியை மூட்டிவிட்டனர் ஆங்கில அரசப் பகைவர். 1857-ல் கலகங் கிளர்ந்தது. நூற்றுக்கணக் கான ஆங்கிலர் உயிரிழந்தனர். பல்வேறு அரசினர் கட்டடங்கள் பாழாயின.


அடுத்த ஆண்டில் (1858) கிழக்கிந்தியக் குழும்பு கலைக்கப் பட்டது; இந்திய ஆட்சியை இங்கிலாந்தரசு ஏற்றது. அதிலிருந்து மேன்மேலுந் தொடர்ந்து பல ஆட்சிச் சீர்திருத்தங்கள் ஏற்பட்டன. இந்தியர் தன்னாட்சிக்குப் பயிற்சி பெற்றுவந்தனர். இந்திய வொற்று மைக்கும் நாளடைவில் இந்தியர் ஆட்சிப் பொறுப்பேற்றற்கும் இந்தியத் தேசியப் பேராயத்தை (The Indian National Congress) ஆலன் ஆக்த்தேவியன் கியூம் (Allan Octavian Hume) என்ற ஆங்கிலேயரே 1885-ல் தோற்றுவித்தார். அவரையே இந்தியத் தேசியப் பேராயத் தந்தையென்று, காந்தியாரும் 2ஆம் வட்டமேசை மாநாட்டிற் குறிப்பிட்டார்.

ஆங்கில ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் உட்பட்ட இந்திய நாடுகளிலெல்லாம் காந்தியாரும் நேருவும் பிறரும் புகுந்து, பேராயக் கொள்கைகளைப் பரப்பவும் கட்சிக் கிளைகளைத் தோற்றுவிக்கவும், இன்றியமையாத உரிமையும் பாதுகாப்பும் ஆங்கிலராட்-