பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இக்காலம்

19



பள்ளிக்கல்வி, கல்லூரிக்கல்வி, பல்கலைக்கழக ஆராய்ச்சிக் கல்வி ஆகிய கல்வி முறைகளும் ஆங்கிலர் நமக்குக் கற்பித்தனவே.

சீர்திருத்தம்

தக்கர் பிண்டாரிகள் ஒழிப்பு, உடன்கட்டை யேறல் நிறுத்தம், தீண்டாமை விலக்கு, நரக்காவு (நரபலி) நீக்கம், இள மணத்தடுப்பு, செடிலாட்டத் தடை முதலியன சிறந்த சீர்திருத்தங்கள்.

ஆங்கிலராட்சியில், அரசியல் அலுவலகங்களுள்ளும் தொடர் வண்டிகளுள்ளும் பொதுவிடங்களிலும் குலவேற்றுமை நீக்கியதே தீண்டாமை விலக்குத் தொடக்கம்.

தாழ்த்தப்பட்டவரையே நாகரிகப்படுத்திச் சமைப்போரும் பரிமாறிகளுமாக அமர்த்தி, அவர் படைத்ததைப் பிராமணரும் பெருமையுடன் உண்ணுமாறு செய்தது, ஆங்கில அதிகாரிகள் செய்த அருஞ்செயலாகும்.

போக்குவரத்து

அஞ்சல்துறை, இருப்புப்பாதை, தானியங்கிகள், நீராவிக் கலங்கள், வானூர்திகள், கம்பியிலி, வானொலி, தொலைக் காட்சி முதலியன, ஆங்கில நாகரிகத்தைப் பழிக்கும் பகுத்தறிவிலிகளே நாணமற்றுப் பயன்படுத்தும் நற்போக்குவரத்து வாயில்களாகும்.

ஆட்சிக் கழகங்கள்

சட்டப்பேரவை, சட்டமன்றம் ஆகிய இரண்டும் சேர்ந்த சட்டசபை என்னும் நாடாளு மன்றமும், உலகவை, அரசவை ஆகிய இரண்டும் சேர்ந்த பாராளுமன்றம் என்னும் நடுவணாளு மன்றமும், அவற்றின் நடப்பு முறையும், அவற்றிற்குரிய தேர்தல் முறையும் ஆங்கிலரை அல்லது ஆங்கில அமெரிக்கரைப் பின்பற்றிச் செய்வனவே.

கல்வித்துறையிற் கையாளும் கலைமன்றம் (Academy), மூப்பரவை (Senate), மீயாட்சிக்குழு (Syndicate) என்னும் அமைப்பு முறைகளும் இத்தகையனவே.

இக்காலக் காவல் பயிற்சியும் படைப் பயிற்சியும் ஆங்கில முறைப்பட்டவை.

கூட்டியம் (Band)

ஊர்வலத்திற்கும் விழாக் கொண்டாட்டத்திற்கும் ஆங்கிலர் அல்லது மேலையர் கூட்டியம் போற் சிறப்பது வேறொன்றுமில்லை.