பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

தமிழ் இலக்கிய வரலாறு



உரைநடை வளர்ச்சி

பண்டைத் தமிழ்ப் புலவர் உரைநடையைப் போற்றாது செய்யுளையே இலக்கியத்திற்குக் கையாண்டமை, அவரது சீரிய அகக்கரண வளர்ச்சியைக் காட்டுமேயன்றித் தளர்ச்சியைக் காட்டாது. எக்காலத்தும் உரைநடையினும் செய்யுளே ஆற்றல் மிக்க தென்பதை எவரும் மறார். முற்காலத் தமிழ்ப்புலவர் செயலை இக்காலத் தமிழரும் ஏனை நாட்டாரும் குறைகூறுவது, “பொரி மாவை மெச்சினானாம் பொக்கை வாயன்” என்னும் பழமொழியை விளக்குவதே.

மூவாயிர வாண்டு ஆரிய அடிமைத்தனத்துள் மூழ்கி அகக்கரண வலிமையும் கடுத்துப்பாடும் ஆற்றலு மிழந்து, கடுகளவும் நாணமின்றித் தம்மைப் பிறப்பில் தாழ்ந்தவராகக் கருதும் இற்றைத் தமிழர், உரைநடை யிலக்கியத்தையே கையாளவியலும்.

பண்டைத் தமிழிலக்கியம் அகரமுதலியுட்பல பெரும் பாலும் செய்யுளாகவே யிருந்தது. பாட்டிற்குப் பொருள் கூறும் உரையையும் ஒரு சாரார் எளிய செய்யுளிலேயே இயற்றினர். செய்யுள் நிலைக் களங்கள் ஏழனுள் உரையையும் ஒன்றாகத் தொல்காப்பியங் கூறுதல் காண்க.

பண்டை யிலக்கிய வுரைநடை, பாட்டிடை வைத்த சிறுபகுதி, பாட்டின் அல்லது நூற்பாவின் பொருளுரைப்பு, அஃறிணை பற்றிய கட்டுக் கதை, இயற்கையொடு பொருந்திய நகைச்சுவைக் கதை, பாட்டொடு கலந்து சமமாக மாறிமாறி வரும் பகுதி என ஐவகைப்பட்டதாகத் தொல்காப்பியங் கூறும்.

“பாட்டிடை வைத்த குறிப்பி னானும்
பாவின் றெழுந்த கிளவி யானும்
பொருளொடு புணராப் பொய்ம்மொழி யானும்
பொருளொடு புணர்ந்த நகைமொழி யானுமென்
றுரைநடை வகையே நான்கென மொழிப.” (தொல். செய். 173)

“தொன்மை தானே
யுரையொடு புணர்ந்த பழமை மேற்றே.” (தொல். செய்.237)

இவற்றுள் முதலது, உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாகிய சிலப்பதிகாரத்தில் வருவது போன்றது; இரண்டாவது, இறையனாரகப் பொருளுரை போல்வது; மூன்றாவது, பஞ்சதந்திரக் கதையைப் பேரள வொத்தது; நாலாவது, அவிவேக பூரணகுரு கதையை ஒரு மருங்கொத்தது; ஐந்தாவது, பெருந்தேவனார் பாரதமும் தகடூர் யாத்திரையும் போல்வ தென்பர் பேராசிரியர்.