பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இக்காலம்

21


எண்வகை வனப்பும் தொல்காப்பியர் காலத்திற்கு முந்தியவை யாதலால், வடமொழிச் சம்பு (Campu) தமிழ்த் தொன்மையைப் பின்பற்றியதாகவே யிருத்தல் வேண்டும்.

ஊர்ச்சபை யுள்ளிட்ட அரசியல் நடபடிக்கைகளும் பொது மக்கள் எழுத்துப் போக்குவரத்துமே, பண்டைக் காலத்தில் உரை நடையில் நிகழ்ந்தன. ஆங்கிலராட்சி தோன்றிய பின், அகரமுதலி, பாடப்பொத்தகம், அறிவியல் நூல், ஆராய்ச்சி நூல், கலைநூல் முதலிய கல்விநூல்கள் அனைத்தும் உரை நடையிலேயே எழுதப்பட்டன. செய்யுள் வடிவிலுள்ள இலக்கண இலக்கியப் புலவியங்கட் கெல்லாம் உரைகள் வரையப்பட்டன. பத்துப்பாட்டுப் போன்ற பாட்டுத் தொகைகளும் பெரிய புராணம் போன்ற தொன்மங்களும் உரைநடை வடிவில் நடைபெயர்க்கவும், அயன்மொழிப் பொத்தகங்கள் அவ்வடிவில் மொழிபெயர்க்கவும், பட்டன.

செய்தித்தாள், ஆராய்ச்சியிதழ், கட்டுரை, புதினம் முதலிய பல புது இலக்கிய வகைகள் தோன்றின.

செய்தித்தாள், நாட்சரி (Daily), கிழமையன் (Weekly), மாதிகை (Monthly), காலாண்டிதழ் (Quarterly), ஆண்டிதழ் (Annual) எனப் பல வகைப்பட்டு, ஆராய்ச்சியுங் கலந்தது.

உரைநடை முறையில் 17ஆம் நூற்றாண்டில் தோன்றி அகர முதலி ஆங்கிலராட்சிக் காலத்திற்கு முன்பே வளர்ச்சி யுற்று. தமிழ்- தமிழ் என்னும் ஒருமொழியனும் தமிழ்-அயன் மொழி என்னும் இரு மொழியனுமாக இருவகைப்பட்டிருந்தது. ஆங்கிலர் காலத்தில் அது மிக விரிவடைந்து இலக்கத்திற்கு மேற் பட்ட சொற்களைக் கொண்டதாயிற்று.

ஆனந்தபோதினி, ஞானபோதினி, விவேகபோதினி, முதலிய மாதிகைகளின் பின், செந்தமிழ், தமிழ்ப்பொழில் செந்தமிழ்ச் செல்வி முதலிய மாதிகைகள் தோன்றின.

தமிழ்ப்பாடப் பொத்தகங்கள் மிகுதியாக எழுதினவர் கா. நமச்சிவாய முதலியார்.

சிறந்த புராணங்களை உரைநடைப்படுத்தியவர் ஆறுமுக நாவலர்.

புதினத்தைத் தொடங்கியவர் வேதநாயகம்பிள்ளை. தொடர்ந்து பல புதினங்கள் எழுதியவர் ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார் முதலியோர்.

பல்வகை ஆண்டுமலர், விழாமலர், நினைவுமலர், என்னும் பெயரில் பல அரிய கட்டுரைத் திரட்டுகள் வெளிவந்தன. புலவர் பலர் தனித்தனி பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரைந்து வெளியிட்டனர்.