பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

தமிழ் இலக்கிய வரலாறு


திரு. நாரண துரைக்கண்ணனார், திரு. அகிலனார் முதலியோர் சிறுகதைகளும் புதினங்களும் புனைந்தனர்.

திருந்திய முறையிற் பல நாடகங்களை எழுதியவர் பம்மல் சம்பந்த முதலியார்.

வரலாறு, நாட்டுவரலாறு, இனவரலாறு, மொழி வரலாறு, மதவரலாறு, வாழ்க்கை வரலாறு முதலியனவாகப் பலதிறப்பட்டது. பல உரைநடைப் பொத்தகங்களைத் தனித்தமிழில் எழுதியவர் மறைமலையடிகள்; கலவைத் தமிழில் எழுதியவர் பெரும் பேராசிரியர் உ.வே. சாமிநாதையர்.

இலக்கியப் பண்பாடு

வரலாற்றுணர்ச்சி, பொருட்சிறப்பு, கால மலையாமை, இட மலையாமை, உலக மலையாமை, அறிவியலமைப்பு, முறையின் வைப்பு, வாய்மை வண்ணனை, உயர்வுநவிற்சியின்மை, சொல்லணியினும் பொருளணி சிறத்தல், பொதுநல நோக்கு, இரட்டுறலின்மை, நடையெளிமை, பொருட்டெளிவு முதலிய பண்புகளமைய நூலெழுதுதலும், பிறர்நூலை நடுநிலையாகத் திறனாய்வு செய்தலும், சில அறிஞர்க்கேனும் அமைந்திருப்பது ஆங்கில இலக்கியப் பயிற்சியினாலேயே என்பது மறுக் கொணாததாம்.

ஆங்கிலராட்சி நீக்கம் மிக முந்தியமை

ஆங்கிலர் நீங்கி முப்பதாண்டிற்கு மேலாகியும், இன்னும் வறுமையும் குலப்பிரிவினையும் ஒழியவில்லை; தாழ்த்தப்பட்டவர்க்கும் செல்வர்க்கும் உயிர்ப் பாதுகாப்பில்லை; வேலையில்லாத் திண்டாட்டமும், மக்கட் பெருக்கமும், அஞ்சி நடுங்கத்தக்க வகையில் மேன்மேலும் விரைந்து வளர்ந்தோங்கி வருகின்றன; இந்திய ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும், குலைத்தற்கு அடிகோலும் இந்தித் திணிப்பு இன்னுந் தீர்ந்தபாடில்லை. எல்லா வகையிலும் இந்திய முன்னேற்றத்திற்கு இன்றியமையாத ஆங்கிலக் கல்வியின் அருமை பெருமை உணரப்படாமையால், இந்திய ஆட்சிமொழியும் பொது மொழியும் இன்னும் திட்டஞ் செய்யப்பட வில்லை; சீனத்தினால் மட்டுமன்றி இந்தியாவினின்று பிரிந்துபோன பாக்கித்தானத்தினாலும் போரச்சம் இருந்து கொண்டேயிருப்பதனால், அமைதிகுலைந்து என்றும் கவலைக்கும் கலக்கத்திற்குமே இடமாகியிருந்து வருகின்றது. இதை எண்ணிப் பார்க்கின், ஆங்கிலர் கால் நூற்றாண்டு முந்திப் போய்விட்டனர் என்னும் அறிஞர் கூற்றுத் திண்ணம் பெறவே செய்கின்றது.