பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இக்காலம்

25


"பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
பிள்ளை யைப்பெறுந் தாய்மறந் தாலும்
உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
உயிரை மேவிய உடல்மறந் தாலும்
கற்ற நெஞ்சகங் கலைமறந் தாலும்
கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே”.

என்னும் இராமலிங்க அடிகள் பாட்டைப் பாடி, "நீலா! இப்பாட்டில் தேகம் என்னும் வடசொல்லை நீக்கி யாக்கை என்னும் தென்சொல்லை யமைத்திருந்தால் எத்துணை இன்னோசையாகவும் தூய தமிழாகவும் இருக்கும்! இங்ஙனம் அயற்சொற்களை ஆள்வதனால், இன்னோசையும் தூய்மையுங் கெடுவதுடன், நாளடைவில் தமிழ்ச்சொற்களும் ஒவ்வொன்றாக வழக்கொழிந்து போகின்ற னவே!” என்று மகளிடம் கூறி வருந்த, அம்மகளும் “அப்பா” அப்படி யானால் இனிமேல் நாம் தனித்தமிழிலேயே பேசுவோம்” என்று தம் ஆர்வத்தைத் தெரிவித்தார். அடிகள் அதை மெச்சி அன்றே சுவாமி வேதாசலம் என்னும் தம் பெயரை மறைமலையடிகள் என்று மாற்றி, அன்றுமுதல் தனித்தமிழிலேயே பேசவும் எழுதவும் தலைப்பட்டார்.

இனி, மேல்வரைந்த பாட்டின் ஈற்றடிப் பிற்பகுதியை, நற்சிவ போற்றியை நான்மற வேனே என்று மாற்றிக் கொண்டால் இன்னும் நன்றாயிருக்கும்.

தனித்தமிழ் என்பது ஒரு செயற்கையமைப்பென்றும், அதன் காலம் மறைமலையடிகளொடு கடந்துவிட்டதென்றும், பலர் கருதுகின்றனர். இது தமிழின் சிறப்பியல்பை அறியாமையால் அல்லது பிறமொழிகளைப்போல் தமிழையுங் கருதுவதால் எழுங்கருத்தே.

ஆரியர் வருமுன் தமிழ் இயற்கையாக எப்படி வழங்கினதோ, அப்படி வழங்குவதே தனித்தமிழ். அது உலக முதன் மொழி யாதலால், பிற்காலப் பிற மொழிகளில் எழுந்த வல்லொலிகள் பல அதிலில்லை. அவை அதற்குத் தேவையல்ல. மக்களின் கருத்தைத் தெரிவிக்கும் மொழிக்கு வேண்டியவை சொற்களேயன்றித் தனி யெழுத் தொலிகளல்ல. தமிழர் தம் கருத்தைத் தெரிவிக்கவேண்டிய சொற்களெல்லாம், ஏற்கெனவே தமிழில் அமைந்துள்ளன. புதுக் கருத்துகளைத் தெரிவிக்கக் கூடிய புதுச்சொற்களைப் புனைந்து கொள்வதற்கும், தேவையான கருவிச்சொற்களும் கருச்சொற்களும் அதில் உள்ளன.

எம்மொழியிலும் எல்லா மொழியொலிகளு மில்லை. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனியுடம்புள்ளது. அது அவ்வம்