பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இக்காலம்

27


கட்டாயப் பாடமாகப் புகுத்தப்பட்டது. இராசகோபாலாச் சாரியார் 200 பள்ளிகளில் மட்டும் புகுத்தினார். பின்னர், திரு. சி. சுப்பிரமணியனார் 600 பள்ளிகளிலும், அதன்பின், திரு. அவிநாசி லிங்கஞ் செட்டியார் எல்லாப் பள்ளிகளிலும் இந்தியைப் புகுத்தி விட்டனர். உண்மைத் தமிழரான மாணவரும் ஆசிரியரும் புலவரும் பொதுமக்களும் அரசியற் கட்சிக்காரரும் பெரியாரின் தன்மான இயக்கத்தாரும், எத்துணையோ வன்மையாக எதிர்த்துச் சிறை சென்றனர். எண்மர் தம் உடம்பிற் கன்னெயூற்றித் தம்மையெரித்துக் கொண்டனர். ஆயினும், பேராயத் தமிழமைச்சரே சற்றும் இரங்காது வடநாட்டு இந்தியார் போன்று நடந்துகொண்டனர். மதுரைத் தமிழ் மாணவர் இந்தியெதிர்த்து ஊர்வலம் வந்தபோது, பேராயக் கட்சி வெறியர் மாணவர் கைகளை வெட்டினர். திரு. பக்தவச்சலனார் முதலமைச்சராயிருந்த காலத்தில் அண்ணாமலை, பல்கலைக்கழக மாணவர் ஊர்வலத்தில் இராசேந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்தியைப் புகுத்தின இராசகோபாலாச்சாரியாரே பிற்காலத்தில் இந்தியை வன்மையாக எதிர்த்தும், பேராயக் கட்சித் தமிழர் அவரைப் பின்பற்றவில்லை. இந்தியெதிர்த்துச் சிறை சென்ற மறவர்க்குத் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட அரசினர் உதவித் தொகையும், பேராயத் தமிழர் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டு விட்டது.

தமிழ்நாட்டுப் பேராயக் கட்சி, வடநாட்டு இந்தியாரை மேல் தலைவராகவும், தென்னாட்டுப் பிராமணரைக் கீழ்த் தலைவராகவும், கொண்டது. அதனால், ஆட்சித்துறை இந்தித் திணிப்பில் இந்தியாரோடும், திருக்கோயில் வழிபாட்டுச் சமற்கிருதத் திணிப்பிற் பிராமணரோடும், பெரிதும் ஒத்துழைத்துத் தமிழுக்கும் தமிழருக்கும் பெருந்தீங்கு செய்துவருகின்றனர் பேராயத் தமிழர்.

7. பெரியார் தன்மான இயக்கம்

தமிழன் விடுதலைத் தலைவர் மூவருள்
அமரும் ஈகையர் அறநூல் வள்ளுவர்
தமியின் மொழியினர் தவநன் மறைமலை
இமிழ்தன் மானியர் இராம சாமியார்.

அரிய செயல்களை ஆற்று வார்தமைப்
பெரியர் எனச்சொலும் பிறங்கு திருக்குறள்
உரியர் இப்பெயர்க் கொருவர் தேரினே
இரியீ ரோடையர் இராம சாமியார்.

இல்லத் திருந்துநல் லின்ப வாழ்வுறும்
செல்வச் சிறப்பினிற் சிறிதும் வேட்டிலர்