பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இக்காலம்

29


மிக்க இராசகோபாலாச்சாரியார் பேராயத்தினின்று பிரிந்து, தன்னுரிமைக் (சுதந்தரக்) கட்சியென ஒரு புதுக் கட்சியைத் தோற்றுவித்துக் கொண்டார். இந்தியெதிர்ப்பும் வரவர வலுத்தது. பெரியாரின் திராவிடர் கழகத்தினின்று பிரிந்த திராவிடர் முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்திருந்த அறிஞர் அண்ணாதுரையார், 1967ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் தன்னுரிமைக் கட்சியொடு கூட்டுச் சேர்ந்து, எதிர்பாராத முழு வெற்றியடைந்ததனாலும், அமைச்சுக் குழுவிற்கு வேண்டிய பெரும்பான்மை தம் கட்சியே பெற்றிருந்ததனாலும், தி.மு.க. ஆட்சியே தோற்றுவித்துவிட்டார். இதுவே தமிழ்நாட்டுத் தமிழராட்சித் தொடக்கம். தி.மு.க. கட்சியிற் பிராமணர் உறுப்பினராக இடமின்மையால், அமைச்சுக் குழுவிலும் அவர்க்கிடமில்லாது போயிற்று.

எதிர்பார்த்தவாறு, இந்திக் கட்டாயப் பாடம் நீக்கப் பட்டது. தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழித் திட்டமே தமிழ்நாடாட்சி மொழிக் கொள்கையாயிற்று.

ஈராண்டு கழித்து, அறிஞர் அண்ணாதுரையார் இறந்து போய்விட்டதனால், இன்று மாண்புமிகு கலைஞர் கருணாநிதியார் என்னும் அருட்செல்வனார் தமிழ்நாட்டு முதல்வராய் இருந்து வருகின்றார்.

9. இற்றைத் தமிழர் நிலைமை

ஆங்கிலவரசும், ஆங்கிலக் கல்வியும், நயன்மைக் கட்சியாட்சியும், சுந்தரம் பிள்ளை விழிப்பூட்டும், மறைமலையடிகள் தனித் தமிழ்த் தொண்டும், பெரியார் பகுத்தறிவியக்கமும், பாரதிதாசனார் இனமுன்னேற்றப் பாடல்களும் தோன்றி எத்தனையோ ஆண்டு களாகியும், தமிழர் இன்னும் கடந்த மூவாயிர ஆண்டுக்கால உறக்கத்தினின்று பெருவாரியாக விழித்தெழவில்லை.

(1) வரலாற்றுப் பொத்தகங்களில், தமிழ இனத்தின் உடம்பமைப்பைக் காட்டத் தாழ்த்தப்பட்டவருள்ளும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஓர் இரப்போனின் அல்லது எளியோனின் உருவமே பொறிக்கப்பட்டுள்ளது. உண்மையான தமிழன் உடம்பமைப்பை, ஆனந்தரங்கப் பிள்ளை, பச்சையப்ப முதலியார், சுந்தரம் பிள்ளை, பவானந்தம் பிள்ளை, பாண்டித் துரைத் தேவர், உமாமகேசுவரம் பிள்ளை, அ. இராமசாமிக் கவுண்டர், வெ.வ. இராமசாமி (நாடார்), ஆ. இராமசாமி முதலியார், நல்லசாமிப் பிள்ளை, சோமசுந்தர நாயகர், மறைமலையடிகள், கார்மேகக் கோனார், கி.ஆ.பெ. விசுவநாதம், சிங்கைக் கோபால கிருட்டிணனார் போன்றார் உருவப் படங்களே காட்டமுடியும். இதை ஒருவருங் கவனிப்பதில்லை.