பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இக்காலம்

31


 சேரநாட்டு நாயர் திருமண வழக்கத்தையே, சோழ பாண்டி நாடுகளிலும் புகுத்த முயற்சி நடந்ததாகத் தெரிகின்றது. அம் முயற்சியையே நச்சினார்க்கினியர் உரை குறிப்பாகத் தெரிவிக்கின்றது.

இவ் விழிதகையான உரையை, எத்தமிழ்ப் புலவரும் பேராசிரியரும் ஆராய்ச்சியாளரும் தமிழ்க்கழகமும் பல்கலைக் கழகப் பாடப் பொத்தகக் குழுவும், மறுத்ததோ கடிந்ததோ இல்லவேயில்லை.

(3) வேறெந்நாட்டிலும், கல்விசெல்வத்தால் அல்லது தொகை வலிமையால் சிறந்தாலன்றி, வந்தேறியர் முன் வாணரைத் தாழ்த்துவதேயில்லை. இந் நாட்டிலோ, விரல் விட்டெண்ணத் தக்க சிறுதொகையினரும் தாழ்ந்த அறிவினரும் வலிமையில்லாதவரும் இரப்போர் நிலையினரும் ஆன ஒரு குடிபுகு வகுப்பார். முதுகுடியரையெல்லாம் உடனுண்ணத் தகாதவரென்று ஒதுக்கி வைத்துள்ளார்.

ஒரு வகுப்பார் எத்துணை உயர்ந்தோராயினும், உடனுண்ணும் உறவிற்குரிய தகுதிகள் நிறம், தோற்றப்பொலிவு, துப்புரவு, ஒழுக்கம், நாகரிகம் என்னும் ஐந்தே. இவ்வைந்தும் ஒருங்கே யுடைய அருளூண் வெள்ளாளர், முதலியார், செட்டியார் முதலிய பல வகுப்பார் தமிழரிடையே உள்ளனர். ஆயினும், பிராமணர் அவருடன் இல்லத்தில் உண்பதில்லை. இதைச் சரியென்று தமிழரும் ஒப்புக்கொள்வதுபோல் அமைந்திருக்கின்றனர். இதிலேயே இரு வகுப்பாரிடையும் பகுத்தறிவின்மை தோன்றுகின்றது. உண்டிச் சாலையிலும் வெளியிடத்திலும் உடனுண்ணும்போது, வீட்டிலும் ஏன் உடனுண்ணக்கூடாது?

ஆரியக் குலப்பிரி வொழுங்குப்படி, இடையர் வெள்ளாளரினுந் தாழ்ந்தவர். அவரிடைக் கொள்வனை கொடுப்பனையில்லை. ஆயின், ஒரு வெள்ளாளன் பொற்கலத்தில் தயிர் கொடுத் தாலும் பிராமணர் வாங்கிக் குடிப்பதில்லை. ஓர் இடைச்சி தன் பழைய மட்கலத்தில் தன் வீட்டுத் தண்ணீர் விட்டுக் கலந்து தயிர் கொடுப்பின், பிராமணர் வானமுதம் போல் வாங்கிக் குடிப்பர். ஆயினும், அவ்விடைச்சியின் உறவினன் படித்து ஆசிரியனாய் அல்லது அரசியல் அலுவலனாயிருந்து தன் வீட்டில் தயிர் கொடுத்தால், பிராமணர் அதை வாங்குவதில்லை. இடையர் குடும்பத்துப் பிறந்த ஆடவனோ பெண்டோ படியாதவரா யிருந்தால்தான், அவர் விற்குந் தயிரைப் பிராமணர் வாங்குவர்; படித்தவராயின் வாங்கார். இதைத் தமிழர் ஆய்ந்து பார்ப்பதேயில்லை. பகுத்தறிவின்மையே அதற்குக் காரணம்.

இனி, அவல்,கடலை வகைகள், பொரி வகைகள், அப்பம் (ரொட்டி), ஈரட்டி (biscuit) முதலிய பல உண்பண்டங்களுந்