பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இக்காலம்

35


பட்டிருத்தல் வேண்டும். அவன் மனை கோவில் எனப்பட்டது (கோ = அரசன். இல் வீடு. கோவில்-கோயில்.) அம்மண்ணகவரசன் இறந்தபின் விண்ணக அரசனாகக் கருதப்பட்டு, முகில் அல்லது மழைத் தெய்வமாகத் தொடர்ந்து வணங்கப்பட்டிருத்தல் வேண்டும். வேந்தன் என்பது மகுடம் வேய்ந்த அரசனைக் குறிக்குஞ் சொல்லே. (வேய்ந்தான் வேய்ந்தன் - வேந்தன். வேய்தல் = முடியணிதல்.) “வேந்தன் மேய தீம்புன லுலகமும்” (தொல். அகத். 5)

வேந்தன் விண்ணகத்தானானபின், அரசன்மனை அரண் மனையென்றும், தெய்வமனை கோயில் என்றும் சொல்லப்பட்டன. குறிஞ்சி நிலத்தினின்று சேயோன் (முருகன்) வணக்கமும், முல்லைநிலத்தினின்று மாயோன் (திருமால்) வணக்கமும், பாலை நிலத்தினின்று மாயோள் (காளி) வணக்கமும், மருத நிலத்திற் புகுந்தபின், கோயில் என்னும் சொல் தெய்வமனையையே சிறப்பாகக் குறிக்கலாயிற்று. இங்ஙனம் அரசன் மனையே திருக்கோயிற்கு மூலமாகும்.

இடைக்கழக நூல்களின் வழிப்பட்ட தொல்காப்பியம், அரசன் தலைநகர்ப் புறமதிலையும் அதின்மேற் செய்யும் போரையும் பற்றி “முழுமுதல் அரணம்” (புறத். 10), “தொல்லெயிற் கிவர்தல்”, “வருபகை பேணார் ஆரெயில்” (புறத். 12), “இகன்மதிற் குடுமி கொண்ட மண்ணுமங் கலமும்" (புறத். 13) என்று கூறுதல்,

“உயர்வகலம் திண்மை அருமையிந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.” (குறள்.743)

என்னுந் திருக்குறளை நினைவுறுத்தலால், இந்தியக் கட்டடக் கலை தமிழகத்திலேயே தோன்றியிருத்தல் வேண்டும்.

இனி, தமிழர் வரலாற்றிற்கெட்டாத் தலைக்கழக முன்னைக் காலந் தொட்டு முருகன், சிவன், திருமால், அம்மன் (காளி) என்னும் நால்தெய்வங்கட்கு எடுத்துவரும் கோவிலமைப்பையும்; இறை வனைச் சிவன் திருமால் என்னும் பெருந்தேவ வடிவிலும் கடவுள் என்னும் உருவற்ற முழு முதல் வடிவிலும் வழிபட்டு (ஆராதித்து) வழுத்தி (துதித்து) வரும் போற்றி (அர்ச்சனை) முறையையும் பற்றிய நூல்கள் தமிழாயிராது, கடுகளவுங் கடவுளறிவின்றிச் சிறுதெய்வ வேள்வி களையே வளர்த்து வந்த ஆரியரின் அரைச் செயற்கையான சமற்கிருதம் என்னும் இலக்கிய மொழியில் காமிகம், காரணம், சுப்பிரபேதம், மிருகேந்திரம் முதலிய சைவ ஆகமங்களும், பாஞ்ச ராத்திரம், வைகானசம் என்னும் வைணவ ஆகமங்களும், அக்கினி புராணம், மச்ச புராணம், பிரமாண்ட புராணம், கருட புராணம், பவிஷிய புராணம், முதலிய புராணங்களும், சகளாதிகாரம்,