பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இக்காலம்

41


தொல்காப்பியர்க்கு முந்தி வாழ்ந்தவர். அகத்தியர் பாட்டியல் பருணர் பாட்டியல் என்றும் வழங்கும்.

பன்னிருபாட்டியற்குப் பிற்பட்டவை

வெண்பாப் பாட்டியல், வரையறுத்த பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், நவநீதப் பாட்டியல், தத்தாத்திரேயப் பாட்டியல், பண்டாரப் பாட்டியல், இலக்கணவிலக்கப் பாட்டியல் முதலியன.

சில பாட்டியல்கள் வேறு வகையான பெயர்கள் பெற்றும் வழங்குகின்றன. அவை, பிரபந்தத் திரட்டு, பிரபந்த தீபம், அகத்தியனார் ஆனந்தவோத்து, அவிநயனார் காலவியல், செய்யுள் வகைமை, திருப்பிரவாசிரியர் தூக்கியல், முள்ளியார் கவித்தொகை முதலியன.

எப்பெயர் பெற்றிருப்பினும், வரணப் பாகுபாட்டைப் புகுத்தியிருக்கும் இலக்கணமெல்லாம் தமிழுக்கு மாறானவை யென்றும், புலவர் பாடத்தேர்விற்குப் பாடமாக வைக்கத் தகாதவேயென்றும், திட்டமாகவும் திண்ணமாகவும் அறிதல் வேண்டும்.

பிரயோக விவேகம்

இது, வடமொழியிலக்கண வழியது. தென்மொழி யிலக்கண மென்று, வலிந்தும் நலிந்தும் தமிழ்ப் பற்றில்லாத ஒரு பிராமணரால் எழுதப்பட்டதனால், விலக்கற்குரியது.

இலக்கணக் கொத்து

இதன் ஆசிரியரான சுவாமிநாத தேசிகர் வையாபுரியார்க்கு மூலவர்.


அன்றியுந் தமிழ்நூற் களவிலை யவற்றுள்
ஒன்றே யாயினும் தனித்தமி ழுண்டோ
அன்றியு ஐந்தெழுத் தாலொரு பாடையென்
றறையவே நாணுவர் அறிவுடை யோரே
ஆகையால் யானும் அதுவே யறிக
வடமொழி தென்மொழி யெனுமிரு மொழியினும்
இலக்கணம் ஒன்றே யென்றே யெண்ணுக

என்று, அவர் கூறியது வரலாற்றறிவும் மொழியாராய்ச்சியு மில்லாத அக்காலத்திற்கு ஏற்கும்; இக் காலத்திற்கு ஏற்காது.

உ-உவ்-உவ, உவத்தல் = ஒத்தல். உ-ஒ-ஒவ்-ஒவ்வு. ஒ-ஓ-ஓவு-ஓவம், ஓவியம்.

உவமை-உவமம்-உவமன்.