பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

தமிழ் இலக்கிய வரலாறு


தொன்மைக்குக் கிரேக்க விவிலியத்தினின்று காட்டியிருக்கும் சான்றுச் சொற்களை மறுத்திருப்பதும், "மொழிப் பொருட் காரணம் விழிப்பத் தோன்றா” என்னும் தொல்காப்பிய நூற்பாவை (உரி. 96) "Tolkappiyar only says that the origin of words is beyond ascertainment” என்று தவறாக மொழி பெயர்த்திருப்பதும், வையாபுரிப்பிள்ளையார் தமிழைத் தாழ்த்த வேண்டுமென்னுங் குறிக்கோள் கொண்டே மேற்குறித்த பொத்தகங்களை எழுதியிருப்பதைத் தெரிவிக்கின்றன. அதனால், இன்று 'வையாபுரி' என்னும் பெயர் தமிழைக் காட்டிக்கொடுப்பவன் எனப் பொருள்படுவது மிகவுந் தக்கதே.

(5) சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி (The Madras University Tamil Lexicon)

சென்னைப் ப.க. தமிழ் அகரமுதலி, சிலவகையிற் சிறந்ததும் பிற்றை யகரமுதலித் தொகுப்பிற்குப் பெரிதும் பயன்படுவதுமா யிருப்பினும், அடிப்படைக் கொள்கையிலும், பல சொற்களின் மூலமும் பொருளும் பற்றியும், பல பொருள்களின் இயல்வரையறையிலும், மிகமிக வழுவி, உலக முதல் உயர்தனிச் செம்மொழியும் திரவிடத் தாயும் ஆரியமூலமுமாயுள்ள தமிழை, பன்மொழிக் கலவைப் புன்சிறு புதுமொழியாகக் காட்டியிருப்பதால், தமிழுக்கு மாபெருங் கேட்டை விளைப்பதாகும்.

ஏறத்தாழ நாலரையிலக்கம் உருபா செலவிட்டு 29 ஆண்டு நீடிய காலத்தில் தொகுக்கப்பட்ட அகரமுதலி, இங்ஙனம் குறைபாடுள்ளதாயிருப்பதற்கு, அதன் தலைமைத் தொகுப்பாளரின் பற்றின்மையும், அதற்குத் துணைநின்ற வையாபுரிப் பிள்ளையின் காட்டிக்கொடுப்புமே காரணம்.

அடிப்படைத் தமிழ்ச் சொற்களெல்லாம் ஆரியமாகக் காட்டியிருப்பது, அதன் தலையாய களங்கமாகும்.

எ-டு : ஐயன், குடும்பம், சிவன், தானம், நாடகம், பள்ளி, முகம். சாயுங்காலம் என்பது வேண்டுமென்றே சாயங்காலம் என வடிவுமாற்றிக் குறிக்கப்பட்டுள்ளது.

இதன் விரிவையும் விளக்கத்தையும், என் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியின் சீர்கேடு' என்னும் சுவடியிற் காண்க.

(6) வே. வேங்கடராசுலு ரெட்டியாரின் கட்டுரைகள்

ஆங்கிலராட்சியின் பின் நேரடியாகத் தமிழராட்சி வரவில்லை. ஆரியராட்சியும் திரவிடராட்சியும் வையாபுரிகளாட்சியும் முறையே இடையிட்டன.