பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இக்காலம்

47




பர். தெ.பொ.மீ.க்கு மாந்தன் பிறந்தகம்பற்றியோ தமிழன் பிறந்தகம் பற்றியோ ஆராய்ச்சியில்லை. அதனால், தமிழன் குமரிநாட்டுத் தோற்றத்தை ஒப்புக்கொள்வதில்லை.

இந்தியா சரியானபடி தெற்கிலுள்ளதென்றும், இந்திய வரலாற்றைத் தெற்கினின்று தொடங்கவேண்டுமென்றும், சென்ற நூற்றாண்டே வரலாற்றாராய்ச்சியாளராலும் நூலாசியராலும் உரைக்கப்பட்டது. ஆயினும், மேலை மொழிநூலார் சமற்கிருதத்தை அடிப்படையாக வைத்தாய்ந்து, மொழிமூலங் காணமுடியாது, எல்லா மொழிகளும் இடுகுறித்தொகுதிகளேயென்றும், ஆயிரம் ஆண்டிற்கொருமுறை மொழிகளெல்லாம் முற்றும் மாறி விடுகின்றனவென்றும், தவறா முடிபு செய்து, பிறர் கண்ணைக் கட்டியதொடு தம் கண்ணையும் இறுக மூடிக் கொண்டனர்.

சொற்களின் வேரையும் பொருட் காரணத்தையும் இயன் மொழிச் சொற்களாலன்றித் திரிமொழிச் சொற்களால் எங்ஙனங் காணமுடியும்? தேகலீ என்னும் வடசொற்கு மூலமாகிய இடைகழி என்னுஞ் சொல், தென்மொழியிலன்றோ இருக்கின்றது! இடைகழி- டேகழி-தேகளி-தேகலீ, டேகழி - டேழி - ரேழி. தியூத்தானியத்திலுள்ள through என்னுஞ் சொல்லிற்கு மூலம் துருவு’ என்பதை, தமிழையன்றோ துருவிக் காணல் வேண்டும்? மேலையர் இற்றை அறிவியலிலும் கம்மியத்திலும் மேலோர் தான். அதனால் திங்கள் மேலருமானார். ஆயின், மொழிகளெல்லாம் பண்டைச் செய்தியாதலின், அவற்றின் மூலத்தையறியக் கீழை மொழிகளிலன்றோ ஆழ இறங்குதல் வேண்டும்!

இனி,

”நெட்டெழுத் தேழே ஒரெழுத் தொருமொழி” (தொல். மொழி. 10)

“எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே.” (தொல். பெயர்.1)

என்னும் ஈராயிரத்தைந்நூறு ஆண்டிற்கு முற்பட்ட தொல்காப்பிய நூற்பாக்களும்,

”செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.”
(26)

“தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.”
(236)

என்னும் ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட திருக்குறள்களும், சொல்லும் பொருளும் சொற்றொடரமைப்பும் நடையும் சிறிதும் மாறாது, அன்றுபோல் இன்றும் தெளிவாய்ப் பொருளுணர்த்துகின்றனவே!