பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

தமிழ் இலக்கிய வரலாறு



ஆகவே, கால்டுவெல் ஐயர் கடைப்பிடித்த கொடிவழி மொழிநூலையே கையாளல் வேண்டும். அஃதன்றி வண்ணனை மொழி நூலை முதற்கண் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் அதன்பின் மதுரை சென்னைப் பல்கலைக்கழகங்களிலும் புகுத்தி நான் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி தொகுப்பதைத் தடுத்து, அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு அழியாக் களங்கத்தை உண்டுபண்ணியுள்ளார் பர். தெ.பொ.மீ.

இனி,

மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த
னகரத் தொடர்மொழி ஒன்பஃ தென்ப
புகரறக் கிளந்த அஃறிணை மேன”
(தொல். மொழி. 49)

என்னும் போலி பற்றிய தொல்காப்பிய நூற்பாவை எண் பற்றியதாகப் பிறழவுணர்ந்து, குளன் என்பது ஒருமையையும் குளம் என்பது பன்மையையும் உணர்த்தும் என்று, தமிழ்க் களஞ்சியத்திலும் வழுப்படவுரைத்து மாணவரும் ஆசிரியரும் மயங்க வைத்துள்ளார்.

அறுவகை யுயிரினப் பகுப்பு சமணர் ஆராய்ச்சியென்னும் வையாபுரியார் கருத்தே இவரதும்.

சுதேசமித்திரன் தீபாவளி மலர் ஒன்றில் (1964?), ‘தமிழிற் பிற மொழிச் சொற்கள்’ என்னுந் தலைப்பில் வெளியிட்ட கட்டுரையில், தமிழின் சொல்வளத்திற்கு இழுக்குண்டாகும் வண்ணம் இளநீர் என்னுஞ் சொல் பொதுப்படத் தேங்காயைக் குறிக்குமென்றும், முண்டாமொழியினின்று வந்ததென்றும் கூறியிள்ளார்.

குரும்பை, இளநீர், தேங்காய், கொப்பரை எனத் தெங்கங்காய் நால்நிலைப்பட்டது. இளநீரைத் தேங்காய் என்றும், தேங்காயை இளநீர் என்றும், எவரும் சொல்லார். வழுக்கையொடு கூடியும் கூடாதும், பருப்பின்றி நீர்மட்டும் இருப்பதே இளநீர். இப் பெயர் ‘தெறுக்கால்’ என்பது போன்று அடையடுத்த ஆகுபெயர்.

தொல்காப்பியக் காலம் கிறித்தவ வூழித் திருப்பம் என்பது இவர் கொள்கை.

டேராடூனில் 1959-ல் நடைபெற்ற வண்ணணை மொழிநூல் வேனிற் பள்ளியில், கன்னடப் பேராசிரியர் ஸ்ரீகண்டையா பொன் என்னுஞ் சொல்லே ஹொன் என்று திரிந்துள்ளதென்று கூறியதை, வண்ணனை மொழிநூற் பள்ளியில் வரலாற்று மொழிநூலைக் கற்பித்தது தவறென்று பர். தெ.பொ.மீ. கண்டித்ததாக மாணவர் கூறுவர்.