பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இக்காலம்

49



 இனி, குசராத்தியாரும் பேராயக் கட்சியினரும் சென்னை ஆளுநராயிருந்தவருமான திரு. கே.கே. சா என்பர், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பர். (Dr) பாலசுப்பிர மணியனாரிடம் தமிழ் பயின்று, உண்மை கண்டு, தமிழ் சமற்கிருதத்திற்கு முந்தியதென்று கூறியதைப் பாராட்டி ஊக்குவதற்குத் தலைமாறாக, அவர் கூற்றை மறுத்து, இந்திய நாகரிகம் கூட்டு நாகரிகமென்று நடுநிலையாளர்போற் கூறியது, பர்.தெ.பொ.மீ. யின் வடமொழிப் பற்றையே தெளிவாகக் காட்டுகின்றது.

(10) பரோ எமெனோ திரவிடச் சொற்பிறப்பியல் அகரமுதலி (A Dravidian Etymological Dictionary, by T. Burrow and M. B. Emeneau)

இது பெயரளவில்தான் சொற்பிறப்பியல் சொற்பிறப்பியல் அகரமுதலி; உண்மையில் ஓர் ஒப்பியல் (Comparative) அகரமுதலியே. இது திரவிட மொழிகளை 22 எனக் கணக்கிட்டு, 4572 பல்திரவிடப் பொதுச்சொற்களைத் தெரித்தெடுத்து இனச்சொற் காட்டி முதன்மையான பொருள்களைக் கூறுகின்றது.

வண்ணனை மொழிநூலைத் தழுவியதனாலும், சமற்கிருத அடிப்படையில் தொகுக்கப்பட்டதனாலும், இது தமிழுக்கு மாறானது; உண்மையான மொழியாராய்ச்சிக்கும் உதவாது. பரோ என்னும் ஆங்கிலரும் எமெனோ என்னும் அமெரிக்கரும் தமிழ்ச் சொற்களின் வேர் காணும் ஆற்றலரல்லர்; பல அடிப்படைத் தமிழ்ச்சொற்களை வடசொற்களென்று கருதிக் கொண்டிருக்கின்றனர்; தகப்பன் என்னுஞ் சொல்லைத் தகு + அப்பன் என்று தவறாகப் பிரித்துள்ளனர்.

(11) டி. பாலகிருட்டிணன் நாயரின் மொழிநூல் மாந்தனூல் தொல்பொருள் நூல்வழித் திரவிடத் தோற்ற ஆராய்ச்சி (The Problem of Dravidian Origins-A Linguistic, Anthropological and Archaeological Approach)

T. பாலகிருட்டிணன் நாயர், 1956-57ஆம் ஆண்டு, சென்னைப் பல்கலைக்கழகத்தில், நிகழ்த்திய வயவர் உவில்லியம் மெயெர் மானியச் சொற்பொழிவுகள்(Sir William Meyer Endowment Lectures) இன்று சென்னைப் பல்கலைக்கழகச் செய்தியிதழில் (Journal) பகுதி பகுதியாக வெளிவருகின்றன.

இற்றைத் தமிழுக்கும் அதற்கினமான திரவிட மொழிகட்கும் குமரிநாட்டுத் தமிழே தாயாதலால், தமிழை அடிப்படையாகக் கொள்ளாததும் தெற்கினின்று அல்லது குமரிநாட்டினின்று வரலாற்றைத் தொடங்காததுமான எந்த ஆராய்ச்சியும் இம்மியும் பயன் படாது; உண்மையறிய ஒருவகையிலும் உதவாது.