பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

தமிழ் இலக்கிய வரலாறு




தமிழ் பிராமணியத்தினால் கடந்த மூவாயிரம் ஆண்டு மறையுண்டிருப்பதனால், பிராமணியத்தை எதிர்க்கும் மதுகை அல்லது நெஞ்சுரம் இல்லாதவர், திரவிட மூலங்காணும் முயற்சியில் ஈடுபடுதல் கூடாது.

தமிழரும் திரவிடருமான தென்மொழிப் பேரினத்திற்குள், ஆரிய அடிமைப் பாட்டில் விஞ்சியவர் மலையாளியர். அவருள்ளும் நாயர் வகுப்பினர். அதைக் காட்டும் அவரது திருமணக் கொள்கை முன்னரே கூறப்பட்டது. கேரளம் பழைய சேரநாடாகவும், 13ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரே தமிழகத்தினின்று பிரிந்துபோனதாகவும், இருந்தும், அதன்மொழி வடசொற் கலப்பில் அளவிறந்ததாகவும் திரவிட மொழிகட்குள் முதலிடங் கொண்டதாகவும் அதனாற் பெருமை பெறுவதாகவும் உள்ளது. ஆதலால், நயன்மைக் கட்சி (Justice Party) தோற்றுவித்த T. மாதவன் நாயர் போன்றாரன்றி, வேறெம் மலையாளியரும், சிறப்பாக நாயர் வகுப்பினர், திரவிட மூல ஆராய்ச்சியிற் கனவிலும் ஈடுபடத் தகுதியுடையவரல்லர்.

தமிழன் பிறந்தகம் தென்னாட்டதென்று, முன்னரே சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவராயிருந்த P.T. சீநிவாச ஐயங்கார், 1926-ல் Stone Age in India என்னும் பொத்தக வாயிலாகவும், 1929-ல் History of the Tamils என்னும் பொத்தக வாயிலாகவும், தெள்ளத் தெளியவும் திட்ட வட்டமாகவும் நாட்டிவிட்டார். அதன்பின், 1951-ல் V.R. இராமச்சந்திர தீட்சிதர் எழுதிய Pre-Historic South India என்னும் சென்னைப் பல்கலைக்கழக வெளியீடு, அதற்கு முழு அரண் செய்துவிட்டது. அங்ஙனமிருந்தும், தமிழ்ப்பகைவரும் சிறிதும் பொறுப்பற்றவருமான ஒரு சிலர் தூண்டுதலால் அல்லது முயற்சியால், T.பால கிருட்டிணன் நாயர் சொற்பொழிவுகளைச் சென்னைப் பல்கலைக் கழகம் தன் செய்தியிதழில் வெளியிட்டு வருவது, தமிழாரிய அல்லது தமிழ பிராமணப் போராட்டத்தையும் பகைமையையும் வளர்க்கும் வகையில், தூங்கின மடங்கலை ஓங்கித் தட்டியெழுப்புவதாகவே யுள்ளது.

T. பாலகிருட்டிணன் நாயர் ஆராய்ச்சியில், ஒருசிறிதும் அவர் சொந்தமன்று; அவர் கொள்கையை நாட்டுவதுமன்று.

பர். இலாகோவாரி(Dr. N. Lahovary) எழுதிய ‘திரவிடத் தோற்றமும் மேற்கும்’ (Dravidian Origins and the West) என்னும் பொத்தகத்திலுள்ள, Phonetic Peculiarities, Structural and Morphological Parallels, Examples of Etymological Parallels, Summary and Final Considerations என்னும் ஐம்பகுதிகளும், ஆசிரியர் அறியாவாறு, திரவிடத் தோற்றம் கிழக்கத்தது என்னும் உண்மையையே நாட்டுவனவாயுள்ளன.